நெருங்கும் தேர்தல் முடிவுகள் - திட்டமிட்டதை முடிக்க தமிழகம் வரும் அமித்ஷா
பிரதமர் மோடியை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மழையால் ரத்து
கடந்த ஏப்ரல் 12ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக தமிழகம் வந்தார்.
அன்றைய தினம் சிவகங்கை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சிவகங்கை பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவை ஆதரித்து வாகன பேரணி செய்வதாகவும், திருமயத்தில் உள்ள கோட்டை பைரவர் கோவிலில் தரிசனம் செய்வதாகவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் அன்றைய தினம் திருமயம் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் மழை பெய்தது.இதனால் திருமயம் கோட்டை பைரவர் கோவிலில் அமித்ஷாவின் வாகன பேரணி, சாமி தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டன.
தமிழகம் வருகை
இந்த சூழலில் முன்பு திட்டமிட்டபடி புதுக்கோட்டை அருகே உள்ள திருமயம் கோட்டை பைரவர் கோவிலில் அமித்ஷா சுவாமி தரிசனம் செய்ய வரும் மே மாதம் 30 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே பிரதமர் மோடி 3 நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தர உள்ளார். மே 30ம் தேதி தமிழகம் வர உள்ள பிரதமர் மோடி மே 31, ஜூன் 1 ஆகிய நாட்கள் கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தில் ஈடுபட உள்ளார்.
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கு ஜுன் 1ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அன்று அவர் கன்னியாகுமரியில் தியானத்தில் ஈடுபட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.