தோனி இன்னும் 5 வருஷம் ஆடணும்; அடுத்த CSK கேப்டன் அந்த வீரரா..? - பிரபல வீரர் அதிரடி!
முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தோனியுடனான கிரிக்கெட் பயணம் மற்றும் தோனியின் ஓய்வுக்குப் பிறகு யார் CSK கேப்டனாக வர வேண்டும் என்பது குறித்து பேசியுள்ளார்.
எம்எஸ் தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தவர் மகேந்திர சிங் தோனி. 2007ம் ஆண்டில் டி20 உலகக் கோப்பை, 2011ல் ஒருநாள் உலகக் கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை இந்திய அணிக்கு வென்று கொடுத்தார்.
இதனால் மூன்று விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்றுகொடுத்த ஒரே இந்திய கேப்டனாக எம்எஸ் தோனி இருக்கிறார். கடந்த 2020ம் ஆண்டு அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
கடந்த 2008ம் ஆண்டு முதல் தற்போது வரை சென்னை அணியின் கேப்டனாகவும் இருந்து வரும் தோனி, இதுவரை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஐபிஎல் போட்டியுடன் ஓய்வுபெற்ற முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தோனியுடனான கிரிக்கெட் பயணம் மற்றும் தோனியின் ஓய்வுக்குப் பிறகு யார் சி.எஸ்.கே. கேப்டனாக வர வேண்டும் என்பது குறித்து பேசியுள்ளார்.
அம்பத்தி ராயுடு
அவர் பேசியதாவது "தோனிக்கு பிறகு யாரை கேப்டனாக நியமிக்கலாம் என்று சி.எஸ்.கே டீம் நிர்வாகம் யோசிக்க ஆரம்பிச்சாட்டாங்க. என்னைக் கேட்டால், அடுத்த 7, 8 ஆண்டுகளுக்கு இருக்கக் கூடிய வகையில் இளம் வீரர் யாரையாவது கேப்டனாகப் போட வேண்டும் என்று சொல்வேன்.
ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டனாகப் போடலாம் என்பது என்னுடைய ஆசை. தோனியின் கேப்டன்ஸியை யாராலும் ரீப்ளேஸ் செய்ய முடியாது. அவர் இல்லையென்றால் அதற்கேற்ப அணியை மாற்றியமைத்து புது வியூகம் வகுக்க வேண்டும்" என்றார். மேலும் தோனி குறித்துப் பேசியவர், "தோனி சிறப்பாக பேட்டிங், கீப்பீங் செய்வார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.
அதையெல்லாம் விட, இளம் வீரர்களின் திறமைகளைக் கண்டறிந்து அவர்களை வளர்த்தெடுத்து அதன் மூலம் அணியை வழி நடத்துவதே அவரின் சிறப்பு. தோனி இன்னும் 5 ஆண்டுகள் விளையாட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்" என்று கூறினார்.