விரைவில் மூடப்படும் JIO Cinema? - அம்பானியின் அதிரடி முடிவு
JIO Cinema வை மூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜியோ சினிமா
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்ட்ரீமிங் தளம் ஜியோ சினிமா(jio Cinema). 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஜியோ சினிமாவில் இலவசமாக ஒளிபரப்பட்ட பின், ஜியோ சினிமாவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.
கடந்த பிப்ரவரி மாதம், வால்ட் டிஸ்னிக்கு சொந்தமான டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம், இந்தியாவில் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான வியாகாம் 18 நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்தது. இதற்காக $8.5 பில்லியன் அளவில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
டிஸ்னி ஹாட்ஸ்டார்
இதனையடுத்து, டிஸ்னி ஹாட்ஸ்டாரை தனது முதன்மை ஓடிடி தளமாக செயல்படுத்த ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. டிஸ்னி ஹாட்ஸ்டாரின் வலுவான தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் நிறுவப்பட்ட பயனர்தளம் ஆகியவையே காரணம்.
ஹாட்ஸ்டார் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து 500 மில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனை ஒப்பிடுகையில், ஜியோ சினிமா கூகுள் பிளே ஸ்டோரில் 100 மில்லியன் பதிவிறக்கங்களை மட்டுமே கொண்டுள்ளது.
தற்போது, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள், குளிர்கால ஒலிம்பிக் மற்றும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகளின் உரிமை ஜியோ சினிமாவிடம் உள்ளது. இந்த போட்டிகள் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பப்படும் என கூறப்பபடுகிறது. இதன் காரணமாக ஜியோ சினிமாவை டிஸ்னி ஹாட்ஸ்டாருடன் இணைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.