டார்கெட் முடிக்காம டாய்லெட் போக கூடாது - ஊழியர்களிடம் சத்தியம் வாங்கிய அமேசான்
டார்கெட்டை முடிக்கும் வரை கழிப்பறை, தண்ணீர் இடைவேளைக்கு செல்லக் கூடாது என ஹரியானாவில் அமேசான் இந்தியா குடோனில் உள்ள ஊழியர்களிடம் சத்தியம் வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமேசான் குடோன்
பன்னாட்டு நிறுவனமான அமேசான், இந்தியாவில் ஆன்லைன் ஆர்டர் - டெலிவரி செய்து வருகிறது. அந்த நிறுவனத்தின் குடோன்கள் நாடு முழுதும் பல முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது.
ஏற்கனவே இந்த குடோன்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு அடிப்படை வசதியை ஏற்படுத்தி தரப்படவில்லை என்றும், தண்ணீர், கழிப்பறை வசதி போதுமான அளவில் இல்லை என்றும் அமேசான் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.
இந்த நிலையில், ஹரியானா மாநிலத்தில் உள்ள மானேசரில் அமைந்துள்ள அமேசான் இந்தியா குடோனில் வேலை செய்யும் 24 வயது இளைஞரிடம், அவர்களுக்கு வழங்கப்பட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடிக்கும் வரை கழிப்பறை அல்லது தண்ணீர் இடைவேளைக்கு செல்லக் கூடாது என்று சத்தியம் வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தியம்
மே 16 அன்று, அவர்களது குழுவினர் 30 நிமிட தேநீர் இடைவேளை முடிந்ததும், அங்குள்ள குடோன்களுக்கு பணிக்கு திரும்பியுள்ளனர். அப்போது அவர்களிடம், 'கொடுக்கப்பட்ட டார்கெட்டை முடிக்கும் வரையில் எந்த இடைவேளைக்கும் போக மாட்டோம்' என சத்தியம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த குழுவுக்கு வழங்கப்பட்ட பணி என்னவென்றால், அவர்கள் 6 ட்ராக்களில் இருந்து ஒவ்வொன்றும் 24 அடி இருக்கும் பொருட்களை கீழே இறக்கி குடோனுக்கு உள்ளே கொண்டும் செல்லும் பணியைச் செய்து வருகிறார்கள்.
During the ongoing heatwave, Amazon warehouse workers are forced to rest in locker rooms due to lack of proper facilities. AIWA urges Amazon to provide decent resting areas and implement immediate heat protection measures. ✊?#AmazonWorkers #Heatwave #MakeAmazonPay pic.twitter.com/wzblSraujb
— Amazon India Workers Association (@AiwaInd) June 4, 2024
கடந்த மாதத்தில், குடோனில் உள்ள "உள்ளே செல்லும் குழுவினர்" 8 முறை சத்தியம் செய்துள்ளனர். குறிப்பாக பணிச்சுமை அதிகமாக இருக்கும் பரபரப்பான நாட்களில், இது போன்று சத்தியம் செய்யச் சொன்னதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.. மற்ற இடங்களில் இருந்து குடோனுக்கு வரும் பொருட்களை இந்த குழு கையாள்கிறது.
இடைவேளை
வாரத்தில் ஐந்து நாட்கள், பத்து மணி நேரம் வேலை செய்து, மாதம் ரூ.10,088 சம்பாதிக்கும் 24 வயது இளைஞர் பேசுகையில், “தலா 30 நிமிடங்களான மதிய உணவு, தேநீர் இடைவேளை உட்பட எந்த இடைவேளையும் இல்லாமல் வேலை செய்தாலும், நாங்கள் ஒரு நாளைக்கு நான்கு லாரிகளுக்கு மேல் இறக்க முடியாது.
சில நாட்களுக்கு முன்பு கூட , செயல்திறனை மேம்படுத்தவும், இலக்கை அடையவும் தண்ணீர் மற்றும் கழிவறை இடைவேளைகளை கைவிடுவோம் என்று நாங்கள் உறுதிமொழி எடுத்தோம். கழிவறைகள் மற்றும் பிற இடங்களுக்கு வரும் சீனியர்கள் அங்கு நாங்கள் தேவை இல்லாமல் நேரத்தை செலவிடுகிறோமா என்பதை கண்காணிக்கின்றனர்.
இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான், லாரிகள் வெளியே நிறுத்தப்படுவதால் சூடாக இருக்கிறது, அதில் இருந்து பொருட்களை இறக்கும் போது, விரைவாகவே அவர்கள் சோர்வடைந்து விடுகிறார்கள்" என்று தெரிவித்தார்.
அமேசான் செய்தி தொடர்பாளர்
இதுகுறித்து அமேசான் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, “இந்த புகார்களை நாங்கள் விசாரித்து வருகிறோம், ஆனால் தெளிவாகச் சொல்வதானால், நிலையான வணிக நடைமுறையின் ஒரு பகுதியாக எங்கள் ஊழியர்களிடம் இதுபோன்ற கோரிக்கைகளை நாங்கள் ஒருபோதும் செய்ய மாட்டோம்.
குற்றம் சாட்டப்பட்டது போன்ற ஒரு சம்பவத்தை நாங்கள் கண்டறிந்தால், நாங்கள் உடனடியாக அதை நிறுத்துவோம், மேலும் குழு ஆதரவு, ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு குறித்து சம்பந்தப்பட்ட மேலாளர் மீண்டும் பயிற்சி பெறுவதை உறுதிசெய்வோம். இது குறித்து நாங்கள் தொடர்ந்து விசாரணை நடத்துவோம்." என்று கூறினார்.
வெளிநாடு
வெளிநாடுகளிலும் அமேசான் நிறுவனம் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளது. பாதுகாப்பற்ற பணிசூழல்கள், பணிச்சூழலியல் அபாயங்கள் மற்றும் 6 குடோன்களில் ஏற்பட்ட காயங்களை முறையாகப் புகாரளிக்க தவறியதன் காரணமாக 2022 மற்றும் 2023 ம் ஆண்டுகளில் அமெரிக்காவில் உள்ள தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகம் நிறுவனத்திற்கு எதிராக மேற்கோள்களை வெளியிட்டது என்று தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில், மானேசர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளால் தொழிற்சாலைகள் சட்டம், 1948 இன் கீழ் விதிகள் மீறப்படுவதாக தொழிலாளர் சங்கங்கள் குற்றம் சாட்டின. ஹரியானா தனது வேலை நேரத்தை ஒரு நாளைக்கு 10 மணி நேரத்திற்கும் குறைவாக மாற்றியமைத்துள்ளதால், நிறுவனம் இப்போது அதன் ஊழியர்களை காலை 8.30 முதல் மாலை 6.30 வரை வேலை செய்கிறது.
மனேசர்
சட்டப்படி, ஒரு தொழிற்சாலை ஊழியர் ஒரு நாளைக்கு 9 மணிநேரம் அல்லது வாரத்திற்கு 48 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்தால், அவர் தனது சம்பளத்தில் இரண்டு மடங்கு தகுதியுடையவர். ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை என அங்குள்ள தொழிலாளர் நல அமைப்புகள் தெரிவித்துள்ளன.
மனேசர் குடோனில் பணிபுரியும் பெண் ஒருவர் கூறுகையில், இந்த வளாகத்தில் கழிப்பறை இல்லை. நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால், கழிப்பறை அல்லது லாக்கர் அறைக்கு செல்வதுதான் ஒரே வழி. படுக்கையுடன் கூடிய ஒரு ஓய்வு அறை உள்ளது, ஆனால் அங்கும் 10 நிமிடத்திற்கு மேல் இருக்க அனுமதிக்கப் படுவதில்லை.
ஒரு முறை ஓய்வறையில் ஓய்வெடுக்கும்போது, அங்கு வந்த மேற்பார்வையாளர் தனது அடையாள அட்டையினை போட்டோ எடுத்து, மிரட்டியதாக அவர் குற்றம் சாட்டினார்.
அமேசான் தொழிலாளர்கள் சங்கம்
அமேசான் இந்தியா தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த தர்மேந்தர் குமார் கூறுகையில், "டெல்லியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கவே ஹரியானாவில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் குடோன்கள் இயங்குகின்றன.
டெல்லியில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.21,000-23,000, ஹரியானாவில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.11,000-13,000. இங்கு இருக்கை ஏற்பாடுகள் இல்லை மற்றும் இலக்குகள் நம்பத்தகாதவை, இது தொழிற்சாலைகள் சட்டத்தின் விதிகளை மீறுவதாக உள்ளது. தொழில்துறை ஆய்வாளர்கள் இதை சரிசெய்ய முதலாளிகளிடம் கேட்கலாம். தொழிற்சங்கம் இல்லாதது தொழிலாளர்களுக்கு கடினமாக உள்ளது.”என்று அவர் தெரிவித்துள்ளார்.
அமேசான் செய்தித் தொடர்பாளர்
அமேசான் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை கருத்தில் கொண்டு, எங்கள் அனைத்து கட்டிடங்களிலும் வெப்ப குறியீட்டு கண்காணிப்பு சாதனங்கள் உள்ளன. குறிப்பாக கோடை மாதங்களில் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களை நாங்கள் தொடர்ந்து கண்காணிக்கிறோம்.
எங்கள் கட்டிடங்களுக்குள் வெப்பம் அல்லது ஈரப்பதம் அதிகரிப்பதைக் கண்டால், தற்காலிகமாக வேலையை நிறுத்தி வைப்பது உட்பட வசதியான வேலை நிலைமைகளை வழங்க எங்கள் குழுக்கள் நடவடிக்கை எடுக்கின்றன. எங்களின் அனைத்து கட்டிடங்களிலும் போதுமான காற்றோட்ட வசதி மற்றும் குளிரூட்டும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
ஊழியர்களுக்கு போதுமான அளவு தண்ணீர் வழங்குகிறோம். வழக்கமாக ஓய்வு இடைவேளை வழங்குவதோடு, வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது கூடுதல் இடைவேளைகளை வழங்குகிறோம். ஊழியர்கள் ஓய்வறையை பயன்படுத்த, தண்ணீர் அருந்த, மேலாளர் அல்லது மனித வளத்துறையுடன் பேசுவதற்கு எப்பொழுது வேண்டுமானாலும் இடைவெளிகளை எடுக்கலாம்”என்று அவர் தெரிவித்துள்ளார்.