இனி ஒர்க் ஃப்ரம் ஹோம் கிடையாது.. ஆப்பு வைத்த அமேசான் - வரிசையாக செய்த ராஜினாமா ஊழியர்கள்!
திடீரென அமேசான் நிறுவனத்தின் அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் ராஜினாமா செய்து வருகின்றனர்.
ஒர்க் ஃப்ரம் ஹோம்
கொரோனா காலகட்டத்தில் தோற்று காரணத்தால் அனைத்து கணினி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனத்திலும் ஒர்க் ஃப்ரம் ஹோம் என்ற கலாச்சாரம் வந்தது. தற்பொழுது தோற்று முடிந்துவிட்டது, அதனால் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து பணிபுரியுமாறு கூறி வருகின்றனர்.
இந்த வருட பிப்ரவரி மாத தொடக்கத்தில், குறைந்தது வாரத்தில் மூன்று நாட்களாவது அலுவலகத்திற்கு வந்து பணியாற்றுமாறு தங்கள் ஊழியர்களை அமேசான் நிறுவனம் கூறியிருந்தது. இந்த திடீர் மாற்றத்தினால் ஊழியர்கள் பலர் அமேசான் நிறுவனத்தின் மீது கோபத்தில் உள்ளனர். இதுதொடர்பாக 2000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நிறுவனத்திற்கு எதிராக போராட்டமும் செய்தனர்.
அமேசான் நிறுவனம்
இந்நிலையில், வீட்டிலிருந்து பணியாற்றும் அமேசான் ஊழியர்கள் அனைவரும் 2024-ம் ஆண்டின் முதல் ஆறு மாதத்திற்குள்ளாக சென்ட்ரல் ஹப்பிற்கு பணிபுரிய வந்துவிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. புதிய இடமாற்ற உத்தரவின் காரணமாக பலரும் தங்கள் வேலையை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து, "சில குழுக்களை வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு கூறியிருக்கிறோம்.
சிலரை அலுவலகத்தில் வந்து பணியாற்றுமாறு கூறுகிறோம். பல ஹைபிரிட் மாடல்களை நாங்கள் முயற்சி செய்து பார்க்கிறோம். அனைவரும் ஒன்றிணைந்து குழுவாக இயங்க வேண்டியது அவசியமாக உள்ளது. அதோடு ஊழியர்களின் கவலைகளையும் நாங்கள் காதுகொடுத்து கேட்டு வருகிறோம்.
இறுதியில் இவை எல்லாவற்றையும் விட, நம் வாடிக்கையாளர்களின் தினசரி வாழ்க்கையை எப்படி எளிமையாகவும் சிறப்பானதாகவும் மாற்றுகிறோம் என்பதற்குதான் நாம் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" என்று அமேசான் நிறுவனத்தின் சிஇஓ ஜெஸி ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.