இடைவேளையில்லை..கழிவறை கூட செல்ல முடியாது - ஊழியர்களை வதைக்கும் அமேசான்!
அமேசான் இந்தியாவில் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகூட இல்லை என புகார் எழுந்துள்ளது.
வதைக்கும் அமேசான்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான மற்றும் வறண்ட கோடைக்காலம் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் தற்போது நிலவி வரும் அதீத வெப்பம் காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இந்த சூழலில், பன்னாட்டு ரீடெயில் வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியா
கட்டமைப்பை ஏற்படுத்தி தன்னை வலுவாக நிறுவியுள்ளது. ஆன்லைன் ஆர்டர் டெலிவரியில் இந்தியாவில் தொடங்கப்பட்ட பிளிப்கார்ட் நிறுவனத்துக்கும் அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்ட அமேசான் நிறுவனத்துக்கும் இடையில் கடுமையான போட்டி இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த டிஜிட்டல் உலகத்தில்,
மக்களின் மத்தியில் பொருட்களின் தேவை அதிகரித்துள்ளதால் இந்த நிறுவனங்களுக்கு ஒரு அழுத்தம் ஏற்பட்டுள்ளது எனலாம். அமேசான் நிறுவனம் இப்போது ஒரு வலுவான இடத்தில் இருந்தாலும் , அதன் ஊழியர்களை முறையாக நடத்துகிறார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிலும் நாடு முழுவதும் உள்ள வெப்ப அலை தீவிரமாக வாட்டி வதைக்கிறது.
ஊழியர்களை
இந்த நிலையில், அமேசான் இந்தியா தொழிலாளர்களுக்கு வேலையிடத்தில் அடிப்படை வசதிகள் கூட ஏற்படுத்தப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அமேசான் இந்தியா தொழிலாளர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தர்மேந்திர குமார் கூறுகையில்,
வேலை செய்யும் இடத்தில் அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவது வெப்ப அலை வீசும் தற்போதைய காலச் சூழலில் தொழிலாளர்களுக்கு அதிக அசௌகரியங்களை ஏற்படுத்தி வருகிறது. ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களை இருப்பு வைத்து நகர்த்தும் அமேசான் கிடங்குகள் நாடு முழுவதும் பரவி உள்ள நிலையில்,
அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் 30 டிகிரி செல்ஸியஸ் வரையிலான வெப்பத்தை வேலையிடத்தில் உணர முடிவதாக தெரிவிக்கின்றனர். தொழிலாளர்கள் கழிவறையை பயன்படுத்துவதற்குக் கூட மறுக்கப்பட்டு இடைவேளை இல்லாமல் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர். இது தொடர்பாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.