ஒரே இரவில் 4.6 கிலோ குறைத்த அமன் ஷெராவத் - வினேஷ் போகத்தால் முடியாதது ஏன்?
இந்திய மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் ஒரே இரவில் 4.6 கிலோ எடை குறைத்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ்
2024 ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ம் தேதி வரை நடைபெற உள்ளது. தற்போது வரை இந்தியா 1 வெள்ளி 5 வெண்கல பதக்கங்கள் வென்று தரவரிசை பட்டியலில் 69 வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் நேற்று ஆடவருக்கான மல்யுத்த போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமன் ஷெராவத் போர்ட்டோ ரிக்கோ வீரர் டேரியன் டாய் க்ரூஸை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
அமன் ஷெராவத்
இந்த போட்டிக்கு முந்தைய நாள் ஷெராவத் 61.5 கிலோ எடையுடன் இருந்துள்ளார். அதாவது அவருடைய 57 கிலோ எடைப்பிரிவை தாண்டி 4.5 கிலோ எடை கூடுதலாக இருந்துள்ளார். ஏற்கனவே 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை இறுதிப்போட்டியில் பங்கேற்க விடாமல் ஒலிம்பிக் கமிட்டி தகுதி நீக்கம் செய்தது. மேலும் அவருக்கு பதக்கமும் மறுக்கப்பட்டது.
இந்நிலையில் எடை அதிகம் காரணமாக மற்றொரு வீரர் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் படு மோசமான விமர்சனங்களை எதிர்கொள்வதோடு, இந்தியாவுக்கு இன்னொரு பதக்கம் கைநழுவி போகும் சூழல் ஏற்படும். எனவே பயிற்சியாளர் குழுவுடன் சேர்ந்து எடையை குறைக்க அமன் ஷெராவத் கடினமாக உழைத்தார்.
வினேஷ் போகத்
இதற்காக, 10 மணி நேரத்தில் ஹாட் பாத் (hot bath), சானா குளியல் (sauna bath), டிரெட் மில் ஓட்டம், மசாஜ், ஜாக்கிங், ரன்னிங் என இரவு முழுவதும் உறங்காமல் கடுமையாக பயிற்சி செய்துள்ளார். பயிற்சியின் போது இடைஇடையே வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு, தேன் ஆகியவை கலந்து அளிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 4.30 மணியளவில் உடல் எடையை பரிசோதித்த போது 4.6 கிலோ குறைத்து 56.9 கிலோ எடையுடன் இருந்துள்ளார். 100 கிராம் எடை குறைவாக இருந்ததால் தகுதி நீக்கத்தில் இருந்து தப்பித்து உள்ளார்.
இந்நிலையில் அமன் ஷெராவத் உடல் எடையை குறைத்தது போல் வினேஷ் போகத் ஏன் எடையை குறைக்க முடியவில்லை என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். வினேஷ் போகத்தின் மேல் முறையீடு வழக்கில் இன்று இரவு 9;30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக விளையாட்டுக்கான சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ளது.