என்னை தலைக்கனம் பிடித்தவர் என்கின்றனர்..அறிவில்லாமல் பேச கூடாது - நிர்மலா சீதாராமன்!
தலைக்கனம் பிடித்தவர் போல் பேசுகிறேன் என விமர்சிப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன்
சென்னை எம்.ஆர்.சி நகரில், இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பின் மகளிர் பிரிவு சார்பில் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் "மகளிர் எழுச்சி" என்னும் தலைப்பில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்து கொண்டார்.
இதை தொடர்ந்து, கேள்வி பதில் நிகழ்ச்சியில் பேசிய அவர், “கிராமப்புறங்களில் குறைந்த கல்வி அறிவுடன் இருப்பவர்கள் உங்களையும் என்னையும் விட அவர்கள் மீது அதிக நம்பிக்கை கொண்டவர்கள்,அவர்களிடம் இருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
என்னுடைய நாள் செய்தி தாளில் தொடங்கி சமூக வலைதளங்களில் முடியும். மலை பிரதேசங்களுக்கு செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும்,கல்லூரி காலங்களில் உத்தரகாண்ட்,லடாக் அந்தமான் உள்ளிட்ட பகுதிகளுக்கு ட்ரெக்கிங் சென்றுள்ளேன்.
அறிவில்லாமல்..
மீண்டும் அது போன்று செல்ல வேண்டும் என்பது என் ஆசை. சில நாட்களுக்கு தனியாக அவ்வாறு செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். காய்கறி கடைகளுக்கு நானே செல்வது, எனது தினசரி வேலைகளை நான் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அது தற்போது சாத்தியமில்லை.
ஒருமுறை நான் சென்னையில் மார்க்கெட்டுக்கு சென்று காய்கறி வாங்கினேன். அதை நடிப்பு என்று விமர்சனம் செய்தார்கள். நான் வாங்கிய காய்கறிகளுக்கு பணம் கொடுக்கவில்லை என்றுகூட சொன்னார்கள். இது போன்ற விமர்சனங்களை என்னால் கற்பனை செய்து பார்க்கமுடியவில்லை.
கடைக்குச் சென்று காய்கறி வாங்கிய நிதியமைச்சர் பணம் தரவில்லை என்று செய்தி போட தான் நினைக்கின்றனர். வெளிப்படையாக பேச வேண்டும்,உண்மையை பேச வேண்டும். அறிவில்லாமல் பேச கூடாது. நாடாளுமன்றத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் நடைப்பெற்ற நாட்களை எண்ணி பார்க்கிறேன்.
தலைக்கனம்
அந்த நாட்கள் மீண்டும் திரும்ப வேண்டும் என விரும்புகிறேன். நாடாளுமன்றத்தில் நடப்பவை வருத்தமாக உள்ளது.நாடாளுமன்றம் கூடும் ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.அது மக்களுக்கானதாக இருக்க வேண்டும்.70 ஆண்டுகள் பழைய நாடாளுமன்றத்தில் பல ஆரோக்கியமான மக்களுக்கு தேவையான விவாதங்கள் நடந்துள்ளது.
ஆனால் தற்போது அப்படி நடக்கிறதா என்றால் இல்லை. எதிர்க்கட்சியாக இருந்தால் அடிப்படை ஆதாரம் கூட எதுவும் இல்லாமல் ஆளுங்கட்சி மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியும்,பேச முடியும். ஆனால் சில நேரங்களில் அடிப்படை ஆதாரங்கள் அனைத்தும் வைத்திருந்தாலும் ஆளுங்கட்ச்சியாக இருந்தால் பேச முடியாது.
அது சில நேரங்களில் கோபத்தை ஏற்படுத்தும். தற்போது நான் அதை புரிந்து கொண்டேன் சில நேரங்களில் அமைதியும் சிறந்த வலிமையை தரும் என்று. நிறைய பேர் என்னை தலைக்கனம் பிடித்தவர் போன்று பேசுகிறேன் என்று விமர்சனம் செய்கின்றனர்.
அரசியலில் இருக்கும் ஒரு பெண், பிறந்த வீடு, புகுந்த வீடை எல்லாம் விட்டுவிட்டு எங்கேயோ டெல்லியில் சென்று தனியாக இருக்கும் ஒரு பெண் தன்னை தற்காத்துக் கொள்ள இதை எல்லாம் செய்ய வேண்டியது இருக்கும் ” என்று தெரிவித்தார்.