எதிர்க்கட்சிக்கு ஆதரவான அல்லு அர்ஜுன்!! துணை முதல்வராக பவன் - முற்றும் மோதல்..தவிக்கும் சிரஞ்சீவி
நடிகர் பவன் கல்யாண் ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராக அரியணை எறியுள்ளார்.
மெகா குடும்பம்
தெலுங்கு சினிமா திரையுலகில் பெரும் ஆதிக்கம் செலுத்துபவர்கள் மெகா குடும்பம் எனப்படும் சிரஞ்சீவியின் குடும்பம். சிரஞ்சீவி, அவரின் தம்பி பவன் கல்யாண், மற்றொரு தம்பி நாகபாபு, சிரஞ்சீவியின் மகன் ராம் சரண், நாகபாபுவின் மகன் வருண் தேஜ், சாய் தரம் தேஜ் என பலரும் முன்னணி நடிகர்கள் தான்.
அதே நேரத்தில், அல்லு அர்ஜுனுக்கு சிரஞ்சீவி மாமா முறையாகும். அல்லு ராமலிங்கய்யா என்ற தயாரிப்பாளரின் மகனான அல்லு அரவிந்த் - கீதா தம்பதிகளுக்கு பிறந்தவர் தான் அல்லு அர்ஜுன். இவரும் இந்திய அளவில் பெரிய நடிகராக உள்ளார்.
சிரஞ்சீவி படத்தில் சின்ன கதாபாத்திரம் செய்து அறிமுகமாகி பின்னர் நாயகனாக வளர்ந்த அல்லு அர்ஜுனுக்கு முதலில் ஆதரவளித்தவர்கள் என்றால் மெகா குடும்ப ரசிகர்கள் தான். விழா மேடைகளில் தொடர்ந்து சிரஞ்சீவி - பவன் கல்யாண் பெயரை உச்சரித்து வந்த அல்லு அர்ஜுன், படங்கள் வெற்றி பெற துவங்கியதும், விலகினார்.
படம் ஒன்றின் விழாவில் நேரடியாகவே, பவன் கல்யாண் பெயரை கூறுங்கள் என ரசிகர்கள் கேட்ட போது மைக்கில் செப்பனு பிரதர் (சொல்லமாட்டேன்) என அதிரடியாக தெரிவித்தார் அல்லு அர்ஜுன். அப்போது முதலே அவர் மீது விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருந்தன.
நடந்து முடிந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலில், பவன் கல்யாணுக்கு ஆதரவாக மெகா குடும்ப நடிகர்களை தாண்டி, பல தெலுங்கு நடிகர்களும் ஆதரவை தெரிவித்த நிலையில், அல்லு அர்ஜுன் அதிர்ச்சியளிக்கும் விதமாக எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர் வேட்பாளருக்கு ஆதரவாக நேரில் அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
தற்போது தேர்தல் முடிந்து பவன் கல்யாண் வெற்றி பெற்றுள்ள நிலையில், மெகா குடும்ப ரசிகர்கள் அல்லு அர்ஜுனை கடுமையாக சாடி வருகிறார்கள்.
இதற்கும் அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அர்விந்த் நேரடியாக பவன் கல்யாணுக்கு ஆதரவை தெரிவித்திருந்தார்.
சமூகவலைத்தளங்களில் நிலைமை கையை மீறி சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது பொதுவெளியிலும் வெளிப்படையாக பேச துவங்கிவிட்டனர். சிரஞ்சீவி தர்மசங்கடத்தில் சிக்கியுள்ளார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.