விஜய் உடன் கூட்டணி? நீங்க சப்-டீலர் தானே.. ஒரே போடுபோட்ட சீமான்
விஜய் உடன் கூட்டணி குறித்த கேள்விக்கு சீமான் விளக்கமளித்துள்ளார்.
தவெகவுடன் கூட்டணி
சென்னையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன், கூட்டணியா? என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,
"கொள்கையில் பெரிய தூரம் இருக்கிறது. நீங்கள் பெரியாரை கொள்கை வழிக்காட்டி என்று சொல்கிறீர்கள். நாங்கள் அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரை வழிக்காட்டியாக கொண்டிருக்கிறோம். உங்கள் கொள்கைகளுக்கும் எங்கள் கொள்கைகளுக்கும் ஓராயிரம் கி.மீ இடைவெளி இருக்கிறது.
எந்த கொள்கையில் பெரியாரை ஏற்கிறீர்கள்? என்று கேட்டால் அதை விளக்கி சொல்ல வேண்டும். தமிழை சனியன் என்று சொன்னதை இவர்கள் ஏற்கிறார்களா? தமிழை காட்டு மிராண்டி மொழி என்று சொன்னதையும், தமிழ் படித்தால் எதற்கும் உதவாது. பிச்சை எடுக்க கூட லயக்கு இல்லை என்று சொன்னதையும், தமிழ் சனியனை விட்டு ஒழியுங்கள் என்று சொன்னதையும் இவர்கள் ஏற்கிறார்களா?
சீமான் விளக்கம்
தமிழில் என்ன இருக்கிறது என்று கேட்டதை இவர்கள் ஏற்கிறார்களா?" என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல அதிமுக-பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, "எந்த கொள்கையை காப்பாற்ற கட்சியை தொடங்கினீர்கள்? கொள்கை தேவையில்லை என்றால் திமுகவுடன் இணைந்தவிடலாமே! எதற்காக கிளை கழகங்களாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள்?
அதிமுக பாஜகவுடன் கூட்டணி எனில், அதில் இணைந்துவிடலாமே! தனித்த கட்சி எதற்கு? அவங்க ஹோல் சேல் டீலர், நீங்கள் சப் டீலரா? நாங்கள் அரசியல் விடுதலைக்கு நிற்கிறோம். நாங்கள் அரசியல் வியாபாரம் செய்ய வரவில்லை. இரண்டுக்கும் ரொம்ப தூரம் இருக்கிறது.
அரசியல் நேரத்தில் கொள்கையை பார்க்காமல் இருப்பது என்பது, அரசியல் வியாபாரமாகும். இந்த நாட்டில் அத்தனை பிரச்சனைக்கும் காரணம் திமுக, அதிமுக, காங்கிரஸ் மற்றும் பாஜகதான். என் மாநிலத்தின் அத்தனை உரிமைகளையும் பறித்து சென்றது காங்கிரஸ். உடன் இருந்தது திமுகவும், அதிமுகவும்தான். அப்படிப்பட்ட கட்சிகளுடன் சென்று என்ன உரிமைகளை கேட்பாய்? என கேள்வி எழுப்பியுள்ளார்.