சட்டமன்ற தேர்தல் வந்தால்.. பாஜக-வுடன் கூட்டணியா? எடப்பாடி பழனிசாமி பதில்!
பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
2024 மக்களவை தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியாகின. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்காதது அக்கட்சிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்நிலையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "சட்டமன்ற தேர்தலுக்கும், மக்களவை தேர்தலுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. சட்டமன்ற தேர்தல் வந்தால் மக்கள் எங்களுக்கு சாதகமாக வாக்களிப்பார்கள்.
கூட்டணி இல்லை
திமுக-அதிமுக இரண்டு கட்சிகளுமே மாறி மாறி வெற்றி தோல்வியைக் கண்டு வருகின்றன. பாஜகவுடன் கூட்டணி இருந்திருந்தால் வென்றிருப்போம் என்று, நடந்து முடிந்ததைப் பற்றி பேசக் கூடாது. தேர்தலுக்கு முன்பு அண்ணாமலை பல கனவுகளை கண்டிருப்பார்.
அண்ணாமலையின் கனவு பலிக்கவில்லை என்பதால் இப்படி பேசுகிறார். பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை. 2026-ல் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சியமைக்கும். அதிமுக மீண்டும் வலுப்பெறும்" என்று தெரிவித்துள்ளார்.