அதிமுக - தவெக கூட்டணி; அதிமுக கூட்டத்தில் பறந்த தவெக கொடி!
அதிமுக கூட்டத்தில் தவெக கொடி பறந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக கூட்டம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குமாரபாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சாணார்பாளையம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,
“தி.மு.க. கூட்டணி வலுவாக இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். அது வெற்று கூட்டணி. ஆனால் நமது கூட்டணி வெற்றி கூட்டணி. இதோ பாருங்கள் தவெக கொடி பறக்குது... பிள்ளையார் சுழி போட்டாங்க... எழுச்சி.. ஆரவாரம்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே குமாரபாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தின் ஆரவாரம் உங்களுடைய செவிகளை துளைக்கும். அவர் தங்களது கூட்டணியை நம்பி இருக்கிறார். மீண்டும் ஆட்சியை அமைத்துவிடலாம் என்று கனவு காண்கிறார். அவரது கனவு கானல் நீராக போகும்.
தவெக கொடி
கரூரில் திட்டமிட்டு சதி நடந்திருப்பது அம்பலமாகி உள்ளது. இதனால் நாங்கள் சி.பி.ஐ. விசாரணை தேவை என வலியுறுத்தி வருகிறோம். கரூரில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கூறுகிறார்கள். இதனால் காவல்துறை விசாரித்தால் எப்படி நியாயம் கிடைக்கும்.
எனவே, மக்களுக்கு நியாயம், உண்மை தெரிய வேண்டும் என்றால் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். அப்போது தான் இந்த சம்பவத்திற்கு யார் பொறுப்பு என்ற உண்மை வெளிவரும்” என பேசினார். தவெக கொடியை பார்த்து எடப்பாடி பழனிசாமி சிரித்தபடி கூறிய வார்த்தையால் கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.