75 ஆண்டுகால விஐபி சலுகை ரத்து - அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த முதல்வர்!
அசாம் மாநிலத்தில் 75 ஆண்டு கால விஐபி கலாச்சார விதியை முடிவுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
மின்கட்டணம்
அசாம் மாநிலத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் மின்கட்டணம் மக்கள் வரிப்பணத்தில் செலுத்தப்படுகிறது. இந்நிலையில் இந்த 75 ஆண்டு கால விஐபி கலாச்சார விதியை முடிவுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, அமைச்சர்களும், அனைத்து அரசாங்க ஊழியர்களும் வரும் ஜூலை மாதம் முதல் தங்கள் மின்சார கட்டணத்தை தாங்களே செலுத்த வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.
இதற்கு முன்னுதாரணமாக முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் அவரது தலைமைச் செயலாளரும் வரும் ஜூலை 1-ம் தேதி தங்கள் குடியிருப்பு மின் கட்டணத்தை செலுத்த தொடங்குவார்கள்.
மின்சாரம் துண்டிப்பு
இதுதொடர்பாக ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது "அனைத்து அரசு ஊழியர்களும் ஜூலை 2024 முதல் தங்களது மின்சார நுகர்வுக்கான கட்டணத்தை செலுத்துங்கள். அதேபோல், மின்சாரத்தை சேமிக்கும் வகையில் முதலமைச்சர்,
உள்துறை மற்றும் நிதித் துறை அலுவலகங்களைத் தவிர அனைத்து அரசு அலுவலகங்களிலும் இரவு 8 மணிக்கு தானாகவே மின்சாரத்தை துண்டிக்கும் திட்டத்தை தொடங்கி உள்ளோம். அனைத்து அரசு அலுவலகங்களிலும் சோலார் மின்சாரத்தை படிப்படியாக பயன்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.