நாதகவிலிருந்து விலகுகிறேனா? காளியம்மாவே கொடுத்த பரபர விளக்கம்!
நாதகவிலிருந்து விலகுவது குறித்து காளியம்மாள் விளக்கமளித்துள்ளார்.
நாதகவில் விலகல்
நாம் தமிழர் கட்சியில் இருந்து கடந்த 6 மாதங்களாக விலகுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான காளியம்மாளை கடுமையாக பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு முன்னதாகவே, காளியம்மாள் நாதக கட்சி நிகழ்ச்சிகளில் தீவிரமாக பங்கேற்பதை தவிர்த்து வந்தார். தற்போது காளியம்மாள் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறார். சீமான் உடனான கருத்து வேறுபாடு காரணமாக நாதகவில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியது.
காளியம்மாள் விளக்கம்
மேலும், தவெகவில் விரைவில் இணையவுள்ளதாக கூறப்பட்டது. மணப்பாடு அருகே நடக்கும் நிகழ்ச்சியின் அழைப்பிதழில், காளியம்மாள் பெயருக்கு கீழ் நாதக பொறுப்பு இடம்பெறாமல், சமூக செயற்பாட்டாளர் என்ற அடைமொழி இடம்பெற்றுள்ளது. இந்த அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து காளியம்மாள் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் முடிவு குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வடசென்னை தொகுதியில் போட்டியிட்டு பலரின் கவனத்தையும் ஈர்த்தவர் காளியம்மாள். அந்த தேர்தலில் தோல்வியடைந்தாலும், அவரது பேச்சும், பிரச்சாரமும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.