இனி கள்ளச்சாராயம் தயாரித்தால் ஆயுள் தண்டனை - திருத்தம் செய்யப்பட்ட மதுவிலக்கு சட்டம்
கள்ளச்சாரத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத் திருத்த மசோதா அறிமுகம்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரத்தில், கள்ளச்சாராயம் குடித்த விவகாரத்தில் தற்போது வரை 60க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ள விசயம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் கள்ளக்குறிச்சி சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. தற்போது சட்டமன்ற கூட்ட தொடர் நடந்து வரும் நிலையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்போருக்கு தண்டனையை கடுமையாக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
சட்ட திருத்த மசோதா
இந்த சட்ட திருத்த மசோதாவை மதுவிலக்கு துறை அமைச்சர் சு.முத்துசாமி சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இதனையடுத்து1937 ல் கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு மது விலக்கு சட்டத்தில் திருத்தும் கொண்டு வரப்பட்டுள்ளது.
அத்திருத்தத்தில், இனி கள்ளச்சாரயத்தை தயாரித்து விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையோடு, ரூ.10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். கள்ளச்சாராய விற்பனைக்காக பயன்படுத்தப்படும் அனைத்து அசையும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், மது அருந்தப் பயன்படுத்தப்படும் உரிமை இல்லாத இடங்கள் மூடி சீலிடப்படும்.
மேலும், இதுபோன்று குற்றங்களை செய்து தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட ஒருவரை அந்தப் பகுதியில் இருந்தே நீக்கம் செய்வதற்கு மதுவிலக்கு அதிகாரி அல்லது புலனாய்வு அதிகாரியால் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்வதற்கும் சட்ட திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.