ஒரே நேரத்தில்தான்.. பிலாஸ்பூரில் எய்ம்ஸ்; மதுரையில் பொட்டல்காடு - பிடிஆர்
எய்ம்ஸ் விவகாரத்தில் மத்திய அரசு ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனை
மதுரையில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, திமுகவில் நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே. இலவசங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குக்கும், தேர்தல் ஆணைய கடிதத்துக்கும் முரண்பாடு உள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் மத்திய அரசு ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது. ஒன்றாக அறிவித்த இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனைகளில் பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை நேற்று திறந்து வைத்துள்ளார் பிரதமர் மோடி.
ஒரு தலைப்பட்சம்
பெரும்பான்மையான நிதியை வைத்து மாநில அரசு செயல்படுத்தும் திட்டத்திற்கு பிரதமர் பெயர் வைக்கப்படுகிறது. மத்திய அரசின் பங்களிப்பு திட்டங்களுக்கு தொடர்ச்சியாக நிதியை குறைத்து கொண்டு வருகிறது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை விரைவாக நடத்த மத்திய நிதியமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளேன். குதிரைப் பந்தயம், ஆன்லைன் விளையாட்டுகள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரும் முடிவுக்காக அறிக்கை தயாராகாத காரணத்தால் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை நடத்த முடியவில்லை.
மகளிருக்கு உரிமைத் தொகை வழங்குவதற்காக திரட்டப்பட்ட தகவல்களை ஆராயும் பணியை குழுவினர் மேற்கொண்டு வருகிறார்கள் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.