ஈபிஎஸ் கைது: தமிழகம் முழுவதும் அதிமுகவினர் மறியல் போராட்டம்!
எடப்பாடி பழனிச்சாமி கைதை கண்டித்து பல இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈபிஎஸ் கைது
எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்பி உதயகுமாரை பேரவையில் அங்கீகரிக்காததை கண்டித்து இன்று அதிமுக சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். ஆனால் இந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தடையை மீறி, ஆர்ப்பாட்டம் செய்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து திண்டுக்கல் கல்லறை தோட்டம் பகுதியில் கிழக்கு, மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் ராஜ்மோகன் தலைமையில் அ.தி.மு.க நிர்வாகிகள் ராஜசேகரன், சுப்பிரமணி, சேசு, முரளி, மோகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 80-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதபோல் தேனி மாவட்டம் கம்பம் போக்குவரத்து சிக்னல் அருகே முன்னாள் எம்.எல்.ஏ ஜக்கையன் தலைமையில் அ.தி.மு.கவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசார் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும், நாகையில் முன்னாள் வேளாண்துறை அமைச்சர் ஜீவானந்தம் தலைமையில் அதிமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.