அரை மணி நேரம், பன்னீர் செல்வத்துடன் ஸ்டாலின் இது பெரிய சதி : ஆவேசமான எடப்பாடி
அதிமுகவை முடக்க திமுக தலைவர் ஸ்டாலின் சதித்திட்டம் தீட்டுவதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். சட்டசபையில் முதல்வர் ஸ்டாலினுடன் ஓ.பன்னீர் செல்வம் அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்ததாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் - ஈபிஎஸ் விவகாரம்
அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமானது. ஓபிஎஸ் கட்சியை விட்டு நீக்கப்படுவதாக அறிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி. சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமார் நியமிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதுகுறித்து சட்டசபையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி அங்கீகரிக்கப்பட்ட பதவி இல்லை என சபாநாயகர் அறிவித்தார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர் .
தடையினை மீறி போராட்டம்
சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை நியமிக்காததைக் கண்டித்து அதிமுக சார்பில் சென்னையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதற்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், தடையை மீறி போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுகவினர் கறுப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர். சட்டசபை சபாநாயகருக்கு எதிராக அதிமுகவினர் முழக்கமிட்டனர்.
தடையை மீறி போராட்டம் நடத்தியதால், காவல்துறையினர் இபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்,ஏக்களை கைது செய்து அரசு பேருந்தில் ஏற்றினர். ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி சபாநாயகர் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
அரைமணி நேரம் பேசியுள்ளார்
மேலும், சட்டசபையில் சபாநாயகர் மூலமாக ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார், நேற்றைய தினம் முதல்வர் ஸ்டலினிடம் ஓ.பன்னீர் செல்வம் அரைமணி நேரம் பேசியுள்ளார்.
அதிமுகவை அழிக்க ஸ்டாலின் திட்டமிடுகிறார் அவரது எண்ணம் ஒருபோதும் பலிக்காது. அதிமுகவை சிதைக்க நினைக்கும் ஸ்டாலின் முயற்சி ஒருபோதும் பலிக்காது என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.