இன்று கூடுகிறது அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம்..!
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் கடும் பூதாகரமாக கிளம்பியுள்ள நிலையில் இன்று நிர்வாகிகள் கூட்டம் கூட உள்ளது.
ஓரம் கட்டப்படும் ஓ.பன்னீர்செல்வம்
கடந்த சில நாட்களாக அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணியினர் கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டிவிடும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக அ.தி.மு.க.வின் அங்கீகாரமிக்க நாளேடான 'நமது அம்மா' பத்திரிகையின் நிறுவனர் என்ற பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான உட்கட்சி விவகாரத்திற்கு இடையே அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி அழைப்பு
இது குறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் என்ற பெயரில் அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 27-ந் தேதி (இன்று) திங்கட்கிழமை காலை 10 மணிக்கு தலைமை அலுவலகத்தின் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை கூட்ட அரங்கில் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.