சூறையாடப்பட்ட அதிமுக முன்னாள் MLA வீடு...கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி - 7 பேர் மீது வழக்குப்பதிவு..!
மதுரையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம் வீடு சூறையாடப்பட்டதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீடு மீது தாக்குதல்
மதுரை கருவனுாரைச் சேர்ந்தவர் பொன்னம்பலம் இவர் சமயநல்லுார் தொகுதியில் கடந்த 2001 - 2006 ஆண்டின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் கருவனுாரில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அங்குள்ள கருமாரியம்மன் கோவிலில் மரியாதை தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலத்திற்கும் அதே பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவருக்கும் பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இது தொடர்பாக இருவரது குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. பொன்னம்பலம் வீட்டிற்குள் புகுந்த சில மர்ம நபர்கள் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை அடிதது உதைத்தனர்.
மேலும் அங்கிருந்த ஒரு காரை தீ வைத்து எரித்தனர். மேலும் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களையும் அடித்து நொறுக்கினர்.
அப்போது வீட்டில் இருந்த பொன்னம்பலத்தின் குடும்பத்தினர் தடுத்து நிறுத்தினர். அவர்களை தாக்கிவிட்டு தப்பி சென்றனர். இதில் பொன்னம்பலத்தின் குடும்பத்தினர் குடும்பத்தினர் 5 பேர் காயம் அடைந்தனர்.
எடப்பாடி பழனிசாமி கண்டனம்
இச்சம்பவத்தில் அதிமுக பொதுச்செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். பொன்னம்பலம் குடும்பத்தினர் மீது திமுகவினர் கொடூரமாக தாக்கியும், அவரது வீட்டை சூறையாடியும், வாகனங்களுக்கு தீ வைத்ததாகவும், இது கண்டனத்திற்குரியது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும் இந்த ஆட்சியில் வன்முறை களமாக தமிழ்நாடு மாறி இருப்பது வேதனைக்குரியது என்றும் அவர் விமர்சித்துள்ளார். கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
திமுகவினர் மீது வழக்குப்பதிவு
தாக்குதல் குறித்து பொன்னம்பலத்தின் மருமகன் பழனிக்குமார் அளித்த புகாரின் பேரில் திமுகவைச் சேர்ந்த வேல்முருகன், அருண், சங்கர், கவியரசன், வல்லரசு, பாண்டி, ரத்தினவேல் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து கருவனுார் கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் 24 மணி நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.