மீண்டும் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு - நடந்தது என்ன?
டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டொனால்ட் டிரம்ப்
இந்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளதால் அதன் பரப்புரை அங்கு தீவிரமடைந்துள்ளது. இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனும், அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிட உள்ளதாக இருந்தது.
இந்த சூழலில் தான், கடந்த ஜூலை மாதம் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த டிரம்ப் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது பெரும் பூகம்பமாய் வெடித்தது. அதனை தொடர்ந்து, அதிபர் தேர்தலிலிருந்து விலகுவதாக அண்மையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஜனநாயகக் கட்சியை சார்பாக தற்போதைய துணை அதிபரரும், ஆப்ரிக்க - இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், டொனால்ட் டிரம்ப்பை குறிவைத்து மீண்டும் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கிச் சூடு
அமெரிக்கா, ஃபுளோரிடா மாகாணத்தின் உள்ள கோல்ஃப் கிளப்பில், நேற்று இந்திய நேரப்படி சுமார் 11:30 மணியளவில் டொனால்ட் டிரம்ப் விளையாடிக் கொண்டிருந்தார். ப்போது, டொனால்ட் டிரம்ப்பை குறி வைத்து கிளப்பிற்கு வெளியே இருந்து ஒரு நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இதையடுத்து, அந்த இடத்திற்கு போலீசார் விரைவதற்குள், அந்த நபர் காரில் தப்பிச் சென்றுள்ளார். உடனடியாக போலீசார், அவரை துரத்தி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் டிரம்பிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை எனவும் அவர் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.