தொடரும் பதற்றம் - குமரி, சேலத்திலும் பெட்ரோல் குண்டு வீச்சு!
கோவை, ஈரோடு தொடர்ந்து திருப்பூர், கன்னியாகுமரி, சேலம், உள்ளிட்ட மாவட்டங்களிலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்று வருகிறது.
பெட்ரோல் குண்டு வீச்சு
திருப்பூர், அங்கேரிபாளையம் சாலை கொங்கு வேளாளர் பள்ளி பின்புறம் உள்ள பாஜக கோட்ட பொறுப்பாளர் பாலு என்பவரின் வீட்டில் நள்ளிரவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றுள்ளனர்.
கன்னியாகுமரி, கருமன்கூடல் பகுதியில் உள்ள பாஜக பிரமுகரும் தொழிலதிபருமான கல்யாணசுந்தரம் என்பவர் வீட்டில், நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றுள்ளனர்.
தொடர் தாக்குதல்
ஜன்னலில் விழுந்த பெட்ரோல் குண்டு பெரிய அளவில் தீப்பற்றி எரியாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. சேலம், அம்மாபேட்டையில், ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீட்டிலும் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றுள்ளனர்.
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள பரமக்குடி நன்னுசாமி தெருவில் வசித்து வருபவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சேலம் நகர மண்டல தலைவர் ராஜன். இன்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் ராஜன் வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை பற்றவைத்து வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தீவிர கண்காணிப்பு
நாடு முழுவதும் கடந்து மூன்று நாட்களுக்கு முன்னர் என்ஐஏ அதிகாரிகள், பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். தமிழகம் முழுவதும் 12 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் பலர் கைது செய்யப்பட்டனர்.
இதனை அடுத்து கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் பாஜக, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் வீடுகளில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இதன் எதிரொலியாக முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.