திருக்கழுக்குன்றத்தில் அதிசய சங்கு - 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அதிசயம்!
12 ஆண்டுகள் பிறகு சங்கு தீர்த்த குளத்தில் மிகுந்த சத்தத்துடன் சங்கு பிறந்துள்ளது.
அதிசய சங்கு
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் 1,400 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சங்கு தீர்த்தம் என்ற குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுவதாக நம்பப்படுகிறது.
பெரும்பாலும் கடலில் உள்ள உப்பு நீரில்தான் சங்குகள் தோன்றும். ஆனால் ஆனால் நன்னீரில் உருவாகுவது அதிசய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இப்படி தோன்றும் சங்குகள் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தையொட்டி கோவிலில் நடைபெறும் சங்காபிஷேகத்தில் இடம்பெறும்.
சிறப்பு வழிபாடு
இந்த குளத்தில் கடந்த 1939, 1952, 1976, 1988, 1999-ம் ஆண்டுகளில் சங்கு தோன்றியுள்ளது. மேலும், கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு தோன்றியுள்ளது.
இந்நிலையில் 12 ஆண்டுகள் பிறகு நேற்று சங்கு தீர்த்த குளத்தில் மிகுந்த சத்தத்துடன் சங்கு பிறந்துள்ளது. தற்போது சங்கு பிறந்ததை கேள்விப்பட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோயிலில் குவிந்து சங்கை கண்டு சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர்.