பெண்களின் சுதந்திரம் பறித்த தலிபான்கள் - தடைகளை தகர்த்து ரகசியமாக பட்டப்படிப்பு முடித்த பெண்!
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு மேற்படிப்பு படிக்க தடை இருந்தபோதும் ஒரு பெண் ரகசியமாக படித்து சாதித்துள்ளார்.
பெண்களுக்கு தடை
ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டு ஆகஸ்டில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்தனர். அதன் பின்னர், பெண்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு அவர்கள் உயர்கல்வி பயில கூடாது என்ற தடை விதித்தனர்.
இதனால் ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள சர் இ போல் என்ற பகுதியை சேர்ந்த மாணவி பெகிஸ்தா கைருதீனின் உயர் கல்வி பாதிக்கப்பட்டது.
இவர் கடந்த ஆண்டு சென்னை ஐஐடியில் எம்டெக் கெமிக்கல் இன்ஜினீயரிங் படிப்புக்காக விண்ணப்பித்தார்.
இவர் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றார், ஆனால் அதில் சேர முடியவில்லை. இவரின் நிலையை அறிந்த பேராசிரியர் இவருக்கு ஆன்லைன் மூலம் படிக்க உதவினார்.
அதனால் இவர் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்று பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
ஆப்கான் மாணவி
இந்நிலையில், இவர் கூறியது, " எனது தாய் மருத்துவர், தந்தை பட்டதாரி, எனது அக்கா இந்திய ஐஐடி-ல் பிஎச்டி பட்டம் பெற்றிருக்கிறார். எனது தம்பி பட்டப்படிப்பு பயின்று வருகிறார். எனது தங்கை சட்டம் பயின்றுள்ளார்.
ஆப்கானிஸ்தானின் ஜோஸ்ஜன் பல்கலைக்கழகத்தில் பி.டெக். படிப்பில் தேர்ச்சி பெற்ற எனக்கு சென்னை ஐஐடி-ல் எம்டெக் படிப்பில் சேர இடம் கிடைத்தது.
அதற்குள் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதால் சென்னை ஐஐடி-ல் சேர முடியவில்லை. பேராசிரியர் ரங்கநாதன் ரங்கசுவாமி ஆன்லைனில் கல்வியைத் தொடர ஏற்பாடு செய்தார்.
அதனால் என்னால் படிக்க முடிந்தது, அனால் முதல் 2 செமஸ்டர்கள் கடினமாக இருந்தது.
இரவு பகலாக படித்தேன், மேலும், ஆய்வக வசதியை பெற முடியாததால் வீட்டிலேயே மாதிரி ஆய்வகத்தை உருவாக்க எனது பேராசிரியர் பசவராஜா மடிவாளா குரப்பா அறிவுறுத்தினார். அதன்படி செய்து பயின்றேன்.
அதிவேக இணைப்பு இல்லாத வைபை, சாதாரண லேப்டாப் ஆகியவற்றின் மூலம் எனது எம்டெக் படிப்பை நிறைவு செய்துள்ளேன். சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் நேரில் பங்கேற்று பட்டம் பெற விரும்புகிறேன். ஆனால் அது சாத்தியமில்லை. அடுத்து பிஎச்டி படிக்க விரும்புகிறேன்.
ஆப்கானிஸ்தான் பெண்கள் வீட்டுச் சிறையில் இருந்தாலும் என்னை போன்று தடைகளைத் தாண்டி வீட்டில் இருந்தே படிக்க அறிவுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.