ஸ்டிக்கர் பாய்ஸ் என்று பெயர் பெற்றவர்களே அதிமுகவினர்தான் - அமைச்சர் ரகுபதி காட்டம்!
ஸ்டிக்கர் பாய்ஸ் என்று பெயர் பெற்றவர்களே அதிமுகவினர்தான் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
அமைச்சர் ரகுபதி
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நாகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், சென்னையில் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக அரசு, ஸ்டிக்கர் ஒட்டி திட்டங்களை அறிமுகப்படுத்துகிறார்கள் என்று விமர்சித்துள்ளார்.
'ஸ்டிக்கர் பாய்ஸ்' என்று பெயர் பெற்றவர்கள் அதிமுகவினர். அம்மா மருந்தகத்தை முதல்வர் மருந்தகம் என்ற பெயர் மாற்றி விட்டதாகவும் கூறியுள்ளார். அம்மா மருந்தகம் வேறு, முதல்வர் மருந்தகம் வேறு. அம்மா மருந்தகம் கூட்டுறவு துறையோடு இயங்கியது.
மாநிலம் முழுவதும் அம்மா மருந்தகம் 380 தான் இருந்தது. ஆனால் முதல்வர் மருந்தகம் மாநிலம் முழுவதும் 1,000 திறக்கப்பட உள்ளது. முதல்வர் மருந்தகம் மூலம் அனைத்து வகையான மருந்துகளும் கிடைப்பதுடன், வேலையில்லா திண்டாட்டமும் குறையும்.
ஸ்டிக்கர் பாய்ஸ்
மேலும் அம்மா சிமெண்டு் திட்டத்தை வலிமை சிமெண்டு திட்டமாக மாற்றி விட்டதாகவும் விமர்சித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்திலேயே அம்மா சிமெண்ட் திட்டம் கைவிடப்பட்டது. ஏழை மக்களுக்கு பயன்பெறும் வகையில் வலிமை சிமெண்டு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் சில தொகுதிகளில் அதிமுக 3, 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. அதிமுகவில் உள்ளவர்கள் கட்சியில் இருந்து வெளியேறுவதை தவிர்க்கவே ஜெயக்குமார் இதுமாதிரி பேசி வருகிறார். விக்கிரவாண்டி தேர்தலை பார்த்து பயந்தவர்கள் அதிமுகவினர்.
திமுக எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது.கவர்னரை தன் பக்கம் வைத்துக்கொள்ள தேநீர் விருந்தில் கலந்து கொண்டதாக குற்றம் சாட்டுகின்றனர். திமுகவினருக்கு ஒருபோதும் பாஜகவின் துணை தேவையில்லை.
அதிமுகவுக்கு வேண்டுமானால் பாஜக எஜமானர்களாக இருக்கலாம். இந்தியாவிலேயே பாஜகவை எதிர்ப்பதில் முன்னோடியாக இருந்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் மட்டும்தான். என்று தெரிவித்துள்ளார்.