மத்தியில் இதை செய்யும் அரசுக்கு அதிமுக ஆதரவு அளிக்கும் - கடம்பூர் ராஜூ திட்டவட்டம்!
மத்தியில் தமிழர் நலன் காக்கின்ற அரசுக்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
கடம்பூர் ராஜு
கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நீர்-மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனை அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ திறந்து வைத்தார்.
பின்னர் பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, மோர், பழரசம் வழங்கினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜு "நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தமிழகத்தில் நிலவுகின்ற சூழ்நிலைக்கு ஏற்ப நிச்சயமாக நல்ல மாற்றத்திற்கு வாக்களித்து இருப்பார்கள் என்று நம்புகிறோம்.
அதிமுக ஆதரவு
திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, போதைப் பொருள் பழக்கம், மின் கட்டணம், சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றால் தமிழக மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இவை எல்லாம் தேர்தலில் எதிரொலித்து இருக்கும் என நம்புகிறோம். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று யார் பிரதமராக வந்தாலும் மத்தியில் தமிழர் நலன் காக்கின்ற அரசுக்கு அதிமுக ஆதரவு அளிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.