தீண்டத்தகாத கட்சியா? இப்போ பாஜக கூட்டணிக்காக அதிமுக தவம் கிடக்கிறது - அண்ணாமலை கர்வம்
பாஜக கூட்டணிக்காக அதிமுக தவம் கிடப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை
தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக தரப்பில் தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அதிமுக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.
மேலும், திமுகவை தவிர்த்து வேறு எந்த கட்சியும் எதிரி கிடையாது என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இதனால் அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
கூட்டணிக்காக தவம்..
அதில் பேசிய அவர், பாஜக கட்சி நோட்டா கட்சி. தீண்டத்தகாத கட்சி. பாஜக வந்ததால் தான் நாங்கள் தோற்றோம் என்று பேசினார்கள். ஆனால் இன்று பாஜக கூட்டணி வேண்டுமென்று தவம் கிடக்கும் சூழ்நிலையை ஒவ்வொரு பாஜக தொண்டனும், தலைவனும் உருவாக்கி இருக்கிறார்கள்.
இதனை நினைத்து பெருமை கொள்கிறேன். பாஜக இல்லாமல் தமிழக அரசியல் இல்லை என்ற சூழலை உருவாக்கி இருக்கிறோம். நாங்கள் யாருக்கும் எதிரி கிடையாது. எங்களின் நோக்கம் பாஜகவை நிலை நிறுத்துவதுதான். கடந்த 5 ஆண்டுகளில் எப்படியெல்லாம் பேசினார்கள்.
அதனை கடந்து மற்ற கட்சித் தலைவர்கள் பேசுவதை பாருங்கள். சரியான நேரத்தில் கூட்டணி தொடர்பாக பேசுவோம். எந்த கட்சியையோ, தலைவரையோ சிறுமைப்படுத்த விரும்பவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் குறித்து பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம் என்று தெரிவித்துள்ளார்.