எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கீடு - ஓபிஎஸ் மாற்றம்!
சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கையில் மாற்றம் செய்யப்பட்டு, எடப்பாடி பழனிசாமி இருக்கைக்கு அருகில் ஆர்.பி.உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
துணைத் தலைவர் இருக்கை
அதிமுகவில் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 2022-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவிக்கு ஆர்.பி. உதயகுமார் நியமிக்கப்பட்டு சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. மேலும், எதிர்க்கட்சி தலைவருக்கான இருக்கைக்கு அருகிலேயே எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையும் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
மாற்றம்
இந்நிலையில் நேற்றைய கேள்வி நேரத்துக்கு பிறகு ஓ.பி.எஸ் இருக்கை மாற்றக் கோரி எடப்பாடி பழனிசாமி பேரவையிலேயே கோரிக்கை வைத்தார். அவரின் கோரிக்கையை பரிசீலிக்கும்படி சபாநாயகருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்தார்.
இந்நிலையில் சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கையில் மாற்றம் செய்யப்பட்டு, எடப்பாடி பழனிசாமி இருக்கைக்கு அருகில் ஆர்.பி.உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றம் செய்யப்பட்டு, 2வது வரிசையில் முன்னாள் பேரவைத் தலைவர் தனபாலுக்கு அருகில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.