முடிஞ்சா இத செய்யுங்க விஜயபாஸ்கர் - ஆடி கார் பரிசு தரேன் - அதிமுக தொண்டர் ஆஃபர்
வரும் மக்களவை தேர்தல் அதிமுகவிற்கு பெரும் சவாலான ஒன்றாகவே அமைந்துள்ளது.
மக்களவை தேர்தல்
அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது அதிமுகவிற்கு எந்த வகையிலும் பின்னடைவு இல்லை என்றபோதிலும், தற்போது அக்கட்சி மத்திய - மாநில அரசுகளை எதிர்த்து தேர்தலை சந்திக்கிறது.
தேமுதிக, புதிய தமிழகம், SDPI போன்ற கட்சிகளை கூட்டணியில் சேர்த்து கொண்டுள்ள அதிமுக 33 தொகுதிகளில் நேரடியாக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. கட்சியின் முன்னணி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆடி கார் பரிசு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த அதிமுக தொண்டரான நெவளிநாதன்,முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, கீரமங்கலம் மெய்நின்றநாதர் சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை திமுக வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெறவைத்தால், விஜயபாஸ்கருக்கு ஆடி கார் பரிசளிப்பேன் என அறிவித்துள்ளார்.
இது பெரும் கவனத்தை பெற்றுள்ளது. முன்னதாக, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டத்தில், திருச்சி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 42 வார்டுகளில் அதிமுக வேட்பாளருக்கு அதிக வாக்குகளை பெற்றுத் தரும் வட்டச் செயலாளர்களுக்கு 5 பவுன் தங்கச் சங்கிலியும், சிறப்பாக பணியாற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு இன்னோவா காரும் பரிசளிக்கப்படும் என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.