ஜெ.வை எதிர்த்து போட்டி - பாரம்பரிய திமுகவை சேர்ந்தவருக்கு நெல்லையில் வாய்ப்பு வழங்கிய இபிஎஸ்..! யார் இந்த சிம்லா முத்துச்சோழன்..?
மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்பாளர்களை கட்சிகள் அறிவித்து வருகின்றன.
அதிமுக வேட்பாளர் பட்டியல்
இன்று அதிமுகவின் 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். மொத்தமாக தமிழகம் மற்றும் புதுவையில் அதிமுக 33 இடங்களில் போட்டியிடுகிறது.
அதில், கவனம் பெற்ற வேட்பாளராக மாறியுள்ளார் நெல்லை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்ட்டுள்ள சிம்லா முத்துச்சோழன். அண்மையில்தான் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் சிம்லா முத்துச்சோழன்.
சிம்லா முத்துச்சோழன்
இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதே பலரும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. பாரம்பரியமான திமுக கட்சி குடும்பத்தை சேர்ந்தவர் சிம்லா முத்துச்சோழன். திமுகவின் துணைபொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமாக இருந்த சற்குண பாண்டியனின் இரண்டாவது மருமகள் சிம்லா முத்துச்சோழன்.
கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட சிம்லா முத்துசோழன், கடந்த நீண்ட காலமாக திமுகவில் பணியாற்றியுள்ளார். அக்கட்சியின் வடசென்னை மகளிர் அணி பிரச்சாரக் குழு செயலாளராக பதவி வகித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து களம்கண்டார்.
ஜெயலலிதாவே வெற்றி பெற்றார் என்ற போதிலும்,
அவரின் வெற்றி என்பது வெறும் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு கட்சியில் ஏற்பட்ட முரணான நிகழ்வுகளின் காரணமாக அதிமுகவில் இணைந்த இவருக்கு தற்போது மக்களவை உறுப்பினராகும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.