அடுத்த தேர்தலில் நா.த.க'வுடன் கூட்டணி வேண்டும்!! கோரிக்கை வைக்கும் நிர்வாகிகள் - என்ன செய்வார் இபிஎஸ்??
நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தல் அதிமுகவிற்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.
பின்னடைவில் அதிமுக
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, கடந்த சில தேர்தல்களாக பின்னடைவை சந்தித்து வருகிறது. சட்டமன்ற தேர்தல் தோல்வியை தாண்டி, அக்கட்சி நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் 40/40 இடங்களிலும் தோல்வியடைந்தது. இதற்கும் அக்கட்சியின் கூட்டணியில் தேமுதிக இருந்தது.
உடன் SDPI, புதிய தமிழகம் போன்ற கட்சிகளும் இருந்தன. சில இடங்களில் 3-ஆம் இடத்திற்கும் தள்ளப்பட்டது அதிமுக. இன்னும் மக்களவை தேர்தலுக்கு 2 வருடமே இருக்கும் நிலையில், மக்களவை தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது அதிமுக.
நா.த.க கூட்டணி
சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் கூட்டத்தில் நிர்வாகிகள் தொடர்ந்து அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை வைத்து வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
நேற்று வலுவான கூட்டணி இல்லாததே தோல்விக்கு காரணமாக பலரும் தெரிவித்த நிலையில், இன்றும் குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்துள்ளது. இன்று வந்திருந்த மாவட்ட நிர்வாகிகள், வளர்ந்து வரும் கட்சியான நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வேண்டும் என தெரிவித்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
அதே போல கடந்த தேர்தலில் பாமக போன்ற கட்சியுடன் கூட்டணி இல்லாதது தான் மேற்கு மண்டலங்களில் தோல்வி காரணம் என தெரிவித்ததாக தகவல் வெளிவந்ததுள்ளது.