அதிமுகவினரின் மனைவிகளே திமுகவிற்கு வாக்களிப்பார்கள் - முதல்வர் திட்டம் அப்படி..! திமுக
செய்தியாளர்களை சந்தித்த திமுகவின் செய்தி தொடர்பு துணை செயலாளர் கோவை செல்வராஜ், முதல்வரின் திட்டங்களால் அதிமுகவினரின் மனைவிகளே திமுகவிற்கு தான் வாக்களிப்பார்கள் என்றார்.
எல்லா விலையேற்றத்திற்கும்..
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசியது வருமாறு, சுமார் 32 இலட்ச குடும்பங்கள் மழை வெள்ளத்தால் பாதித்தக்கப்பட்ட போது வராத பிரதமர், தேர்தலுக்காக 5 முறை வந்துள்ளார் என்று விமர்சித்து, பிரதமராக மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என சாடினார்.
பெட்ரோல் - டீசல் மானியம், கேஸ் சிலிண்டர் மானியம், விவசாய உர மானியம் என எதையுமே மத்திய அரசு தரவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், பெட்ரோல் - டீசல் மானியத்தை நிறுத்தியதன் காரணமாக ஆண்டுக்கு 8 இலட்சம் கோடி ரூபாய் வருமானம் மத்திய அரசிற்கு வருவதாக குறிப்பிட்டு, நாட்டில் இருக்கும் அனைத்து விலையேற்றத்திற்கும் மோடி அரசு தான் காரணம் என குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு முறையாக பங்கிட்டு தருவதில்லை என்றும் தமிழ்நாடு 100 ரூபாய் வரி தந்தால், 29 ரூபாய் தான் திரும்ப தருகிறார்கள் என்பதை குறிப்பிட்டார்.
அதிமுகவினரின் மனைவிகளே
போதை பொருள் விவகாரம் குறித்து பேசிய அவர், மத்திய அரசிற்கு தெரியாமல் போதைப்பொருள் வர முடியுமா? என்று வினவி, இது பற்றி பேச பாஜகவிற்கு யோக்கியதை இல்லை என்றார்.
தமிழக முதல்வர் தந்த திட்டங்களின் காரணமாக, அதிமுகவினரின் மனைவிகளே திமுகவிற்கு தான் வாக்களிப்பார்கள் என கூறி, முதல்வர் தவறு செய்தவருக்கு ஆதரவு தரவில்லை என்றும் யார் தவறு செய்தாலும் முதல்வர் தண்டிப்பார் என கூறினார்.