பொதுச்செயலாளர் பதவி; அதிகாரமேயில்லை, மல்லுக்கட்டும் சசிகலா - எடப்பாடி முடிவு என்ன?
பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது என சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுச்செயலாளர் பதவி
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதன்பின், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சசிகலா வாதம்
கடந்த ஆண்டு ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதற்கிடையில், தன்னை அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா உரிமையியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அந்த வழக்கு நிராகரிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு தற்போது, நீதிபதி சுப்பிரமணியன், செந்தில் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் சசிகலா தரப்பு,
“அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளாக இருந்த ஓ.பன்னீர் செல்வம், மதுசூதனன் முன்மொழிந்து, எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்து பொதுச் செயலாளர் ஆன என்னை பதவியில் இருந்து நீக்கியது செல்லாது.
அது தொடர்பான நடைமுறையே சட்ட விரோதமானது. கட்சியில் இருந்து என்னை நீக்கவோ கட்சி விதிகளில் மாற்றம் செய்யவோ அதிகாரம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று விசாரணை தொடரவுள்ளது.