குண்டு கட்டாக தூக்கி சென்ற போலீசார் - மதுரையில் ஆர்.பி.உதயகுமார் திடீர் கைது!!
கப்பலூர் சுங்கச்சாவடி போராட்டத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கப்பலூர் சுங்கச்சாவடி
மதுரை மாவட்டம் கப்பலூர் என்ற பகுதியில் கடந்த 2012-ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை துறை சார்பாக சுங்கச்சாவடி அமைக்கபட்டது. இந்த சுங்கச்சாவடியை வேறு இடத்திற்கு மாற்றவேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கைகளை வைக்கப்பட்டு வருகின்றது.
அதே போல, உள்ளூர் வாகனங்களுக்கு இந்த சுங்கச்சாவடியில் கட்டணமின்றி அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைககள் வைக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் காரணத்தால, நேற்று அமைச்சர் மூர்த்தி தலைமையில் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது.
கைது
அதே நேரத்தில், இன்று மீண்டும் கப்பலூர் சுங்கச்சாவடியில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. 100'க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக, அங்கு போலீசார் விரைந்தனர்.
திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கைது செய்யப்பட்டார். கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி திருமங்கலம் முழுவதும் வணிகர்கள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.