மக்களவை தேர்தல் தோல்வி எதிரொலி - அதிமுகவில் உருவான புதிய அணி!
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை அடுத்து கட்சியை ஒருங்கிணைக்க வேண்டுமென முன்னாள் எம்.பி பேசியுள்ளார்.
அதிமுக தோல்வி
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, தேமுதிக, புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது அதிமுக. போட்டியிட்ட அணைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியதோடு இல்லாமல், சில இடங்களில் மூன்றாம் இடத்திற்கும் சென்றுள்ளது.
தொடர்ச்சியாக தேர்தல்களில் அதிமுக தோல்வியைச் சந்தித்து வரும் நிலையில், அதிமுக ஒன்றிணைவை வலியுறுத்தி குரல்கள் வலுவடைந்துள்ளன. இது குறித்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் பேசியிருந்தனர்.
அதிமுக ஒருங்கிணைப்பு குழு
தற்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் அதிமுக தொண்டர்கள் மீட்பு குழு என்ற அமைப்பை நடத்தி வருகிறார். தற்போது இந்த அமைப்பில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஜேசிடி பிரபாகர்,பெங்களூர் புகழேந்தி ஆகியோர் விலகியுள்ளனர். மூவரும் இணைந்து அதிமுக ஒருங்கிணைப்பு குழு என்ற அமைப்பை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், முன்னாள் எம்.பி கேசி பழனிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ ஜேசிடி பிரபாகர், பெங்களூர் புகழேந்தி ஆகியோர் இன்று கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது
கேசி பழனிசாமி பேசுகையில், "நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவு அதிமுகவினருக்கு பேரிடியாக உள்ளது. இதற்கு முன்பும் அதிமுக தோற்றுள்ளது. ஆனால், இப்படி வரலாறு காணாத வாக்கு வங்கி சரிவை சந்தித்ததில்லை. இந்த தேர்தல் தரும் பாடம், ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்க வேண்டும் என்பதுதான்.
சட்டசபை தேர்தல்
இந்த தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக ஒன்றிணைய வேண்டும் என பெரும்பாலான அதிமுக தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் ஜேசிடி பிரபாகர், புகழேந்தி, நானும் கலந்து பேசி அதிமுகவை ஒற்றுமைப்படுத்தும் பணியை முன்னெடுக்க உள்ளோம். அதிமுக தலைவர்கள் தேசிய கட்சிகளுக்கு அடிபணிந்து செல்லக்கூடாது.
மேலும், அதிமுக ஒரு குடும்பத்தின் பிடியில் சென்றுவிடக்கூடாது. இவரை கட்சியில் சேர்த்துக்கொள்ள மாட்டோம், அவரை சேர்த்துக்கொள்ள மாட்டோம் எனச் சொல்லக்கூடாது. எங்களது ஒரே நோக்கம் மீண்டும் அதிமுக ஒன்றுபட்டு உருவாக்கப்பட வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவரையும் சந்தித்து பேச உள்ளோம். வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக ஆளுங்கட்சியாக உருவெடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் உங்கள் கருத்துகளை எங்கள் மூவரிடமும் தெரிவிக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.