சட்டசபையில் அமளி: மீண்டும்.. மீண்டும் கலவரத்தை உருவாக்கும் அதிமுக - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
கலவரத்தை உருவாக்கும் முயற்சியில் அதிமுக செயல்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுகவினர் அமளி
தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து, கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டதை அடுத்து, அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.
மேலும், பேரவை நடவடிக்கைகளில் இன்று ஒரு நாள் கலந்து கொள்ள அதிமுக உறுப்பினர்களுக்கு தடை விதித்தார். இதனை தொடர்ந்து சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக 24 மணி நேரத்திற்குள் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.
மீண்டும்.. மீண்டும்
இது தொடர்பாக கடந்த 20-ம் தேதி ஒரு மணி நேரத்திற்கு மேலாக அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் அவையில் விரிவாக பேசினார்கள். அதற்கு நானும் சரியான விளக்கத்தை அளித்திருக்கிறேன்.
கேள்வி நேரம் முடிந்தவுடன் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து தான் விவாதிக்க போகிறோம் என்று சபாநாயகர் கூறியும், அதை மீறி சட்டசபையில் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அதிமுகவினர் அவையில் அமளியில் ஈடுபடுகின்றனர். மீண்டும்.. மீண்டும் கலவரத்தை உருவாக்கும் முயற்சியில் அதிமுக செயல்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.