துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு; உயிரிழந்தவர்களின் 13 குடும்பத்திற்கு கூடுதலாக ரூ.5 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு
துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கூடுதலாக ரூ. 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்
கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி துாத்துக்குடியில் செயல்படும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.
இந்த வன்முறையின் போது மக்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர்.
நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தியது. நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது.
தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், துப்பாக்கிச் சூடு நடத்திய போது பொதுமக்களை போலீஸ்காரர் மிருகத்தை வேட்டையாடுவது போல் சுட்டார் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த அறிக்கை குறித்து சட்டப்பேரவையில் இன்று கேள்விகளும், கண்டனங்களையும் சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
முதலமைச்சர் கூடுதல் நிவாரணம் அறிவிப்பு
இதையடுத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
கலவரம் ஏற்பட்டதற்கான காரணங்கள், கலவரத்தை கையாண்ட முறை, கலவரத்திற்கு பிறகு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆணையத்தின் அறிக்கையின் முடிவுகள் அரசால் ஆய்வு செய்யபட்டது என்றார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை பொதுதுறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையை சேர்ந்த 3 வருவாய் துறை அதிகாரிகள் மீது தமிழ்நாடு குடிமைப்பணிகள் ஒழுங்கு மேல்முறையீடு விதிகளின் பிரிவு 17 பி-யின் கீழ் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளது.
உள்துறை மூலமாக அப்போதை தென் மண்டல காவல்துறை தலைவர் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர், துாத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஒரு காவல் கண்காணிப்பாளர், 3 காவல்துறை ஆய்வாளர்கள், ஒரு சார் ஆய்வாளர், 7 காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்ட ஒரு ஆய்வாளர் உட்பட 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒழுங்கு நடவடிக்கையில் விரைவாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு முடிவுக்கு கொண்டுவரப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
ஒரு ஆட்சி நிர்வாகம் இறக்கமற்ற எப்படி நடக்க கூடாது என்பதற்கு உதாரணம் தான் கடந்த அதிமுக ஆட்சியில் நடத்த கொடூரம் என்பதை மறந்துவிடக் கூடாது என்றார்.