துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு; மிருகத்தை வேட்டையாடுவது போல் மக்களை நோக்கி சுட்ட போலீஸ்காரர் - ஆணையம் அறிக்கை
துாத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் போது காட்டில் மிருகத்தை வேட்டையாடுவது போன்று காவலர் சுடலைக்கண்ணு செயல்பட்டு இருப்பதாக அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு
கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி துாத்துக்குடியில் செயல்படும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.
இந்த வன்முறையின் போது மக்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர்.
நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தியது.
விசாரணையின் அறிக்கையை அருணா ஜெகதீசன் ஆணையம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது.
தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு போராட்டக்காரர்களை எச்சரிக்க பயன்படுத்தும் Public Addressing System (PAS) என்ற நன்றாக கேட்க கூடிய மெகா போன் மூலமாக எச்சரிக்கை செய்யப்படவில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதிர்ச்சி தகவல்
- மேலும் துாத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் போது காட்டில் வேட்டையாடுவது போல் காவல் சுடலைக்கண்ணு செயல்பட்டதாகவும்,
- புத்தி சுவாதீனம் இல்லாதவர்போல் இப்படி நடந்து கொள்ள ஆசைப்படுவது அனுமதிக்கத்தக்கதல்ல வேட்டைக்காரர்கள் போல் காவல்துறை செயல்படக் கூடாது.
- சத்தியமங்கலம் பயிற்சியில் கலந்து கொண்டதால் அப்படி சுட வேண்டும் என்ற எண்ணம் சுடலைக்கண்ணுவுக்கு ஏற்பட்டிருக்கலாம்.
- அப்போதைய துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தன் கடைமையிலிருந்து தவறி, அலட்சியமாக செயல்பட்டதால் துப்பாக்கிச் சூடு.
- மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரிடம் எந்த விதமான ஒருங்கிணைப்பும் இல்லாமல் இருந்தது.
- துாத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே இறந்த 5 பேர்களில் கைகளில் எந்த ஆயுதமும் இல்லை.
- முதல் துப்பாக்கி சூடு நடைபெற்று உயிரிழப்பு ஏற்பட்ட பின்பு தான் ஆட்சியர் வளாகத்துக்குள் முதல் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
- மேலும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த போது மாவட்ட ஆட்சியர் வெங்கடேசன் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வெளியூரில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.