பெசன்ட் நகர் வேளாங்கண்ணி திருவிழா- செப்.8 வரை.. தமிழக அரசின் அறிவிப்பு!
பெசன்ட் நகர் வேளாங்கண்ணி திருத்தல திருவிழாவை முன்னிட்டு, செப்டம்பர் 8-ம் தேதி வரை கூடுதலாக மாநகர பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெசன்ட் நகர்
பெசன்ட் நகரில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 52வது ஆண்டு திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடைபெறுகிறது.
இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பதை ஒட்டி சென்னை காவல்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் வருகை தர இருப்பதால், மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல், கார்கள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.
மாநகர பேருந்துகள்
அந்த வகையில் பெசன்ட் நகர் வேளாங்கண்ணி திருத்தல திருவிழாவை முன்னிட்டு, செப்டம்பர் 8-ம் தேதி வரை கூடுதலாக மாநகர பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: "பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று மாலை தொடங்குகிறது.
அடுத்த மாதம் 8ம் தேதியுடன் விழா நிறைவடைகிறது. இதையொட்டி, மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் பயணிகளின் வசதிக்காக சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்து அன்னை வேளாங்கண்ணித் திருத்தலத்துக்கு, செப்டம்பர் 8-ம் தேதி வரை கூடுதல் பேருந்துகள் மாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்பட உள்ளது.
இந்நாட்களில் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து பேருந்துகள் இயக்கத்தைக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.