வேளாங்கண்ணி நவநாள் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை
கொரோனா நோய் பரவல் காரணமாக வருகின்ற 29 ஆம் தேதி தொடங்க உள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவில் பக்தர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயம், கீழ்திசை நாடுகளில் புனித லூர்து நகரம் என்று அழைக்கக்கூடிய பெருமை பெற்றதாகும். இங்கு ஆண்டுதோறும் வேளாங்கண்ணி மாதாவின் பிறந்தநாள் விழா ஆகஸ்ட் 29ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நவநாள் திருவிழாவாக நடைபெறுவது வழக்கம்.
இதற்காக ஆண்டுதோறும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வேளாங்கண்ணியில் தரிசனத்திற்காக வருகை தருவர்.
கொரோனா நோய் பரவல் காரணமாக வருகின்ற 29 ஆம் தேதி தொடங்க உள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவில் பக்தர்கள் கலந்துகொள்ள வேண்டாம் எனவும், தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக பக்தர்கள் திருவிழாவை கண்டுகளிக்க வேண்டுமென நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேபோல், வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து பாதை யாத்திரையாக வரும் பக்தர்கள் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள மாவட்ட ஆட்சியர், ஆலய திருவிழாக்கள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பாகும் எனவும், வேளாங்கண்ணியில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.