அதானி மகன் திருமணம்; மன்னர் சார்லஸ், போப் பங்கேற்பு? தீயாய் பரவும் தகவல்!
அதானி மகன் திருமணத்தில் மன்னர் சார்லஸ் பங்கேற்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
ஜீத் அதானி திருமணம்
உத்தர பிரதேசம், பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இதில் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி கலந்து கொண்டார்.
மேலும், அதானியின் மனைவி பிரீத்தி அதானி, மகன்கள் கரண் மற்றும் ஜீத், மருமகள் பரிதி மற்றும் பேத்தி காவேரி ஆகியோரும் உடன் வந்திருந்தனர். அங்கு அதானி தினசரி ஒரு லட்சம் இலவச உணவு வழங்குவதற்கு ஆதரவாக நிதியுதவியும், 1 கோடி இறைவணக்க புத்தகங்களையும் வழங்கி வருகிறார்.
இந்நிலையில், குஜராத்தின் ஆமதாபாத் நகரில், ஜீத் அதானிக்கும் மற்றும் சூரத் நகரின் பிரபல வைர வியாபாரியான ஜியாமின் ஷாவின் மகளான திவா ஷாவுக்கும் இடையே திருமணம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து அதானியிடம் கேட்கையில், மகன் ஜீத்தின் திருமணம் பிப்ரவரி 7-ந்தேதி நடைபெறும்.
அதானி விளக்கம்
எங்களுடைய நடவடிக்கைகள் எல்லாம் பொதுஜனங்களை போன்றே இருக்கும். ஜீத்தின் திருமணம் மிக எளிமையாக, முழு பாரம்பரிய வழிகளிலேயே இருக்கும் எனக் கூறினார். முன்னதாக, இந்த திருமணத்தில் விருந்தினர்களாக எலான் மஸ்க், பில் கேட்ஸ், மார்க் ஜுக்கர்பர்க், டேனியல் கிரெய்க், டெய்லர் ஸ்விப்ட்,
ஜஸ்டின் பீபர், கன்யே வெஸ்ட், கர்தேஷியன் சகோதரிகள், ரபேல் நடால், தில்ஜித் தோசன்ஜ், சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளா, பில்லி எலிஷ், கோல்ட்ப்ளே, போப் மற்றும் மன்னர் சார்லஸ் கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியானது. ஆனால், இதனை மறுக்கும் வண்ணம் அதானியின் பதில் இருந்தது குறிப்பிடத்தக்கது.