எதிலும் வாய்ப்பு தரவில்லை - பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைகிறார் நடிகை விஜயசாந்தி!
நடிகை விஜயசாந்தி பாஜகவிலிருந்து விலகி ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணையவுள்ளார்.
நடிகை விஜயசாந்தி
தெலுங்கானாவில் வரும் 30ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் பி.ஆர்.எஸ். கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
பாஜக, நடிகர் பவன் கல்யாணின் ஜான்சேனா கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. ஆனால் அக்கட்சி நடிகை விஜய்சாந்திக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை.
அதுமட்டுமல்லாமல் தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட எதிலும் விஜயசாந்திக்கு பாஜக வாய்ப்பு தரவில்லை. நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலிலும் விஜயசாந்தி சேர்க்கப்படவில்லை.
காங்கிரசில் இணைகிறார்
இதனால் உச்சகட்ட அதிருப்தி அடைந்த விஜயசாந்தி, தமது எக்ஸ் பக்கத்தில் தெலுங்கானா மாநிலத்தை காங்கிரஸ் கட்சிதான் காப்பாற்ற வேண்டும் எனவும் பதிவிட்டார். இதனால் நடிகை விஜயசாந்தி பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைகிறார் என கூறப்பட்டது.
இந்நிலையில் பாஜகவில் இருந்து தாம் விலகுவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார் நடிகை விஜயசாந்தி. இது தொடர்பான கடிதத்தை தெலுங்கானா மாநில பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான கிஷண் ரெட்டிக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார். மேலும், வரும் 17ம் தேதி (நாளை) ராகுல் காந்தி முன்னிலையில் நடிகை விஜயசாந்தி காங்கிரஸில் இணைகிறார். இதனை தெலுங்கானா காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.