எல்லாம் ராஜ்கிரணால் தான்.. நான் அழுதுகொண்டே அதை செய்தேன் - பூவே உனக்காக நடிகை ஓபன் டாக்!
பூவே உனக்காக கதாநாயகி நடிகர் ராஜ்கிரண் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
நடிகை சங்கீதா
தமிழ் சினிமாவில் 90s காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் சங்கீதா. இவர் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக சில மலையாள படங்களில் நடித்துள்ளார். என் ரத்தத்தின் ரத்தமே என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
பின்னர், சாமுண்டி, தாலாட்டு, சரிகமபதநி, எல்லாமே என் ராசாதான், புள்ள குட்டிக்காரன், சீதனம், பூவே உனக்காக, காலம் மாறி போச்சு, அலெக்சாண்டர், கங்கா கௌரி என பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் 10ம் வகுப்பு படிக்கும்போது எல்லாமே என் ராசா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படப்பிடிப்பில் நடந்த நிகழ்வு குறித்து நடிகை வெளிப்படையாக பேசியுள்ளார்.
நடிகை பேட்டி
இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், "எல்லாமே என் ராசா திரைப்படத்தில் பெரிய பொண்ணு போல இருக்க வேண்டும் என்பதற்காக நான் கொஞ்சம் வெயிட் போட்ட பிறகு படப்பிடிப்பு துவங்க வேண்டும் என்று எல்லோரும் உறுதியாக இருந்தனர். அதனால் எனக்கு தினமும் ராஜ்கிரண் சார் ஆபீஸில் இருந்து உணவுகள் வரும்.
அதை நான் கண்டிப்பாக சாப்பிட்டே ஆக வேண்டும் என்று சொல்வார்கள். வாழைப்பழம், சாப்பாடு, ஐஸ்கிரீம், தயிர் என விதவிதமாக வரும். ஐஸ்கிரீம் வேண்டுமென்றால் நாம சாப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால் சாப்பாட்டை கொஞ்சமாதான சாப்பிட முடியும். ஆனால் அவர்கள் கண்டிப்பா அதிகமா சாப்பிடணும்னு கட்டாயப்படுத்தினாங்க அப்போ நான் பல நாள் அழுது இருக்கிறேன்.
எங்க அம்மா அப்பா சொல்லிக் கூட நான் அவ்வளவு சாப்பிட்டது இல்ல. ஆனால் ராஜ்கிரண் சார் சொல்லி அனுப்பியதால் நான் அழுது கொண்டே பல நாள் சாப்பிட்டு இருக்கிறேன். ஆனால் கடைசியில் அந்த படம் என்னை கிராமப்புற மக்களிடம் கொண்டு சேர்த்தது, எனக்கு சந்தோஷம்தான்" என்று கூறியுள்ளார்.