8 வயசு தான்.. சொந்த அப்பாவே பாலியல் தொல்லை கொடுத்தார் - குஷ்பு வேதனை!

Jiyath
in பிரபலங்கள்Report this article
8 வயதில் தனது தந்தையால் பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
நடிகை குஷ்பு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் குஷ்பு. பின்னர் கடந்த 2010-ம் ஆண்டு திமுகவில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். இதனையடுத்து 2014-ம் ஆண்டு காங்கிரசில் இணைந்தார்.
இதனைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். தற்போது தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக இருந்து வருகிறார். இதற்கிடையில் 8 வயதில் தனது தந்தையால் பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக குஷ்பு கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேசியதாவது "ஒரு குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்பட்டால், அது வாழ்நாள் முழுவதும் ஒரு வடுவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். என்னுடைய அம்மாவுக்கு மிகவும் மோசமான ஒரு திருமண வாழ்க்கை தான் இருந்தது.
வேதனை
மனைவியை அடிப்பதும், தனது ஒரே மகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதும் தனது பிறப்புரிமை என்று எனது அப்பா நினைத்துக்கொண்டிருந்தார். எனக்கு 8 வயதாக இருக்கும்போது, அவர் என்னை மிஸ்யூஸ் செய்யத் தொடங்கினார்.
அவருக்கு எதிராக மிகவும் துணிச்சலாக நான் பேசத் தொடங்கியபோது எனது வயது 15. எனக்காக ஒரு நிலைப்பாட்டை எடுத்துக்கொள்ள வேண்டிய நேரம் வந்தது. நான் ஏதாவது கூறினால் எனது குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற பயம் இருந்தது. இதனால் பல வருடங்கள் அமைதியாகவே இருந்தேன். இதைச் சொன்னால் எனது அம்மாவே என்னை நம்ப மாட்டார்களோ என்ற பயமும் இருந்தது.
எனக்கு 15 வயதாகும்போது இனியும் தாங்கிக்கொள்ள முடியாது என்ற முடிவுக்கு வந்தேன். அதன் பிறகு எனது அப்பாவை எதிர்த்து பேசத்தொடங்கினேன். நான் எதிர்த்து பேசத்தொடங்கியதும் அவர் எங்கள் வீட்டை விட்டு கிளம்பிவிட்டார். குழந்தைப் பருவம் என்பது எனக்கு மிகவும் கஷ்டமாகத்தான் இருந்தது" என்று பேசியுள்ளார்.