சீமான் திட்டினாலும் பரவாயில்லை; விஜய் வாயில் சர்க்கரை போடுவேன் - நடிகை கஸ்தூரி
தரக்குறைவாக பேசுவது ஒன்றும் உதயநிதிக்கு புதிதில்லை என நடிகை கஸ்தூரி பேசியுள்ளார்.
கஸ்தூரி
இந்து மக்கள் கட்சி சார்பில் சனாதன ஆதரவு வழக்கறிஞர்களுக்கான கருத்தரங்கு திருச்சி ஸ்ரீரங்கத்தில் இன்று (08.12.2024) நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், நடிகை கஸ்தூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகை கஸ்தூரி, "2026இல் திமுக கூட்டணி மைனஸில் செல்லும் என விஜய் கூறியுள்ளார். அப்படி நடந்தால் அவர் வாயில் நான் சர்க்கரை போடுவேன். இதைப் பேசியதற்காகவே விஜய்க்கு ஆதரவு கொடுக்கலாம்.
சீமானுக்கு கோரிக்கை
நான் தனியாக தான் நிற்பேன் என்று சீமான் சொல்லிவிட்டார். நான் சிறையில் இருந்தபோது முதலில் எனக்கு ஆறுதல் சொல்லியது சீமான்தான். நான் வெளியே வந்ததும் அவருக்கு நன்றி சொன்னேன். அந்த நன்றியோட வெளிப்பாடாக அவருக்கு ஒரே ஒரு கோரிக்கை வைக்கிறேன்.
இதற்காக சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை. மக்களோட ஒரே ஆசை திமுகவை வெளியேற்றுவது, எல்லாரும் சேர்ந்து அதை செய்துவிட்டு அப்புறம் அவங்க அவங்க கொள்கையை பாருங்கள் என்று சொல்லிக்கொள்கிறேன்.
உதயநிதி ஸ்டாலின்
திமுக கூட்டணியிலிருந்து திருமாவளவன் வெளியே வருவாரா என்று தெரியவில்லை. காரணம் அவர் இன்று திமுக கூட்டணி எம்பியாக இருக்கிறார். ரொம்ப நாளாக திமுகவுக்கு வாக்கப்பட்டு அங்கேயே விசிக இருக்கிறது.
ஆனால் ஆதவ் அர்ஜுனா அல்லது திருமாவளவன் இருவரில் ஒருவர்தான் விசிகவில் இருப்பார்கள். இனி இருவரும் ஒன்றாக இருக்கமாட்டார்கள் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.
உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 'சினிமா செய்திகளை பார்க்கவில்லை' என்று கூறியது, அவரது ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை பற்றி சொல்கிறார் என்று நான் நினைத்தேன். உதயநிதி அவர்கள் தரக்குறைவாக பேசுவது புதிது இல்லை. இன்றைக்கு விஜய்யையும் ஆதவ் அர்ஜுனாவையும் சொல்லி இருக்கிறார். முன்னதாக சனாதனம் குறித்தும், ரஜினி குறித்தும் அவர் தரக்குறைவாக பேசியுள்ளார்" என கூறினார்.