நாம் தமிழர் பிரிவினைவாத இயக்கமா? மோதி பார்த்து விடலாம் - வருண்குமார் ஐபிஎஸ்க்கு சீமான் சவால்
வருண்குமார் ஐபிஎஸ் நாம் தமிழர் கட்சி பிரிவினைவாதம் என பேசிய பேச்சுக்கு சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.
ஐபிஎஸ் மாநாடு
நாம் தமிழர் கட்சியினருக்கும் திருச்சி எஸ்.பியாக உள்ள வருண்குமார் ஐபிஎஸ்க்கும் கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு இருந்து வருகிறது.
இந்நிலையில், சண்டிகரில் நேற்று (05.12.2024) ஐந்தாவது தேசிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்துள்ளனர்.
நாதக பிரிவினைவாத இயக்கம்
இந்த மாநாட்டில் சைபர் கிரைம், இணையதள மிரட்டல் குறித்து திருச்சி எஸ்.பியாக பணியாற்றி வரும் வருண்குமார் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் நாம் தமிழர் என்னும் கட்சியால் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக உள்ள நானும், என் குடும்பத்தினருமே சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளோம். எனது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
நாம் தமிழர் கட்சிக்கு உலகம் முழுவதும் ஆட்கள் உண்டு. இவர்கள் தடை செய்யப்பட்ட அமைப்பை ஒன்றி தொடங்கப்பட்ட கட்சி. எனது குடும்பத்தினரின் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
அவர்களின் விவரங்கள் கேட்டு 3 மாதங்கள் கடந்த நிலையிலும் இன்ஸ்டாகிராம், முகநூல் மற்றும் எக்ஸ் தளத்திலிருந்து எந்த பதிலும் வரவில்லை. நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய பிரிவினைவாத இயக்கம்" என பேசியிருந்தார். அவரின் பேச்சு நாம் தமிழர் கட்சியினரிடையே கோபத்தை ஏற்படுத்தியது.
சீமான்
இது குறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேட்ட போது, "வருண்குமார் ஐபிஎஸ் ரொம்ப நாளாகவே எங்களை கண்காணித்துக் கொண்டே தானே இருக்கிறார். இந்திய அரசியலமைப்பின்படி, தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் கட்சியை பதிவு செய்து 13 ஆண்டுகளாக இந்த அரசியல் இயக்கத்தை நடத்தி வருகிறோம்.
36 லட்சம் வாக்குகளை பெற்று 3வது பெரிய கட்சியாக தனித்து நின்று அங்கீகாரத்தை பெற்று இருக்கிறோம். அப்படி இருக்கும் போது, திடீரென்று பிரிவினைவாத இயக்கம், அதை கண்காணிக்க வேண்டும் என சொல்கிறார். அவர்தான் நாட்டை ஆளுகிறாரா? எதை வைத்து அவர் பிரிவினைவாத இயக்கம் என்று சொல்கிறார். ஏற்கனவே என்ஐஏ சோதனை நடத்தியது. அவர்களுக்கு தெரியாத நாங்கள் பிரிவினைவாத இயக்கமா இல்லை என்று.
மோதி பார்க்கலாம்
தமிழ், தமிழர் என்பது பிரிவினைவாதமா? அப்படியென்றால் ஏன் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது? உன் தாய் மொழி எது? உண்மையான தமிழ் தாய் தந்தைக்கு பிறந்திருந்தால் இப்படி பேச மாட்டார்.
உனக்கு மட்டும் தான் மனைவி, குழந்தை உள்ளதா? அவர் என் மனைவி, தாய், தந்தை, குழந்தை மற்றும் கட்சி உறுப்பினர்களை இழிவாக பேசியதற்கு அவர் வழக்கு எடுப்பாரா? என் கட்சியை குறை சொல்ல தான் ஐபிஎஸ் ஆனாரா?
அவர் இன்னும் எத்தனை வருடம் இந்த காக்கிச் சட்டையில் இருப்பார்? ஒரு 30 வருசம் இருப்பார். அதன் பிறகு, கீழே இறங்கி தானே ஆகனும். ஆனால், நான் இங்கேயே தான் இருப்பேன். அதனால் பேசும் போது பார்த்து பேச வேண்டும். மோதனும்னா வா மோதி பார்ப்போம். என்ன பண்ணிடுவ? afterall நீ ஒரு ஐபிஎஸ்" என பேசினார்.