பாஜகவின் வேட்பாளர் பட்டியல்: களமிறங்கும் நடிகை கங்கனா - வயநாடு தொகுதியில் இவரா..?
மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் கொண்ட 5-வது பட்டியல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தல்
2024 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.
மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் இந்தியா முழுவதும் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அரசியல் கட்சிகள் அடுத்தடுத்து அறிவித்துக்கொண்டிருக்கின்றன.
பாஜக ஏற்கனவே 4 கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது 5-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. 111 பேர் கொண்ட பட்டியலில் 17 மாநில வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
வேட்பாளர்கள்
இதில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திற்கு அவரது சொந்த மாநிலமான ஹிமாச்சல பிரதேசத்தில் மண்டி தொகுதியில் ஒதுக்கப்பட்டுள்ளது. கேரளா பா.ஜ.க தலைவர் சுரேந்திரனுக்கு வயநாடு தொகுதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமாயணம் டி.வி சீரியலில் ராமராக நடித்த நடிகர் அருண் கோயில் மீரட் தொகுதியிலும், கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாதியா மேற்கு வங்கத்தின் தம்லுக் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
இவர் அரசியலில் ஈடுபடுவதற்காக தனது நீதிபதி வேலையை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒடிசாவின் சம்பல்பூர் தொகுதியிலும், மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பாட்னா சாஹிப் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.