சில்க் ஸ்மிதா அந்த நபரை நம்பி வாழ்ந்தார்; அவர் பலியாக காரணம்.. - மனம் திறந்த நடிகை!
சில்க் ஸ்மிதா குறித்து நடிகை ஜெயமாலினி பேசியுள்ளார்.
சில்க் ஸ்மிதா
80ஸ் கிட்ஸ்களின் கனவு நாயகியாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்தார். இவருக்கு சிறுவயதிலேயே திருமணம் ஆகி மணமுறிவு ஏற்பட்டது.
கிறங்க வைக்கும் கண்களும், சொக்கி இழுக்கும் வனப்பும், திராவிட நிறமும் சில்க் ஸ்மிதாவை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றன. இவர் 1996-ம் ஆண்டு தனது 35 வயதில் இறந்தார்.
அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், சாவில் மர்மம் இருப்பதாகவும் இரு விவாதங்கள் நடந்தன. இந்நிலையில் சில்க் ஸ்மிதா குறித்து நடிகை ஜெயமாலினி சமீபத்தில் அளித்த பேட்டியில் "ஒரு படத்தில் ஹீரோவை சுற்றி வரும் நடிகைகளாக நான், ஜோதிலட்சுமி, சில்க் ஸ்மிதா மூன்று பேரும் நடித்திருந்தோம்.
பெரிய தவறு
சில்க் ஸ்மிதா டாப்பில் இருந்தவர். ஆனால் அந்த நிலையில் இருக்கும்போதே அவர் தற்கொலை செய்துகொண்டது வருத்தமான விஷயம். அவர் தனது வாழ்க்கையில் செய்த பெரிய தவறு ஒன்று இருக்கிறது.
அது காதல். காதலிக்கலாம் தவறில்லை. ஆனால் பெற்றோரை ஒதுக்கி வைக்கக்கூடாது. அவர் தனது தாயையும், சகோதரனையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஒருவரை மட்டுமே நம்பி வாழ்ந்தார். ஆனால் உறவினர்களை பக்கத்தில் வைத்திருந்திருக்க வேண்டும். அவர்கள் நமது பணத்தை பாதி தின்றாலும் கொஞ்சமாவது நமக்காக வைப்பார்கள்.
ஆனால் ரத்த சம்பந்தம் இல்லாதவர்கள், முக்கியமாக நமக்கு உறவினர்கள் ஆதரவு இல்லை என்று அவர்கள் தெரிந்துகொண்டால் ஏமாற்றுவார்கள். அப்படித்தான் சில்க் ஸ்மிதாவும் பலியானார்" என்று தெரிவித்துள்ளார்.