புற்றுநோயோடு கடுமையாக போராடினேன்; என் மகள் அனுபவித்த வலி - கௌதமி உருக்கம்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டது குறித்து நடிகை கௌதமி பேசியுள்ளார்.
கௌதமி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் கௌதமி. பல வருடங்களாக நடிப்பில் இருந்து விலகி இருந்த இவர் சில ஆண்டுகளுக்கு முன் கமலுக்கு ஜோடியாக பாபநாசம் என்ற படத்தில் நடித்திருந்தார்.
நடிப்பதோடு மட்டுமின்றி 1997 முதலே அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். பாஜகவில் நீண்டகாலமாக இருந்து வந்த இவர், சமீபத்தில் அங்கிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் அவருக்கு கொள்கைப்பரப்பு துணை செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் பாதிப்பு
சில ஆண்டுகளுக்கு முன் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கௌதமி, பல போராட்டத்திற்கு பின், தீவிர சிகிச்சைகள் செய்து அதிலிருந்து மீண்டார். இந்நிலையில் புற்றுநோயின் போது அனுபவித்த வேதனைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அதில் பேசிய அவர், "வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் தனியாக இருந்த போது என் மகளுக்கு என்னை தவிர யாரும் இல்லை என்பதை புரிந்து கொண்டேன். எனக்கு சில பாதிப்புகள் வரும்போதே நமக்கும் இந்த நோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று புற்றுநோய் பரிசோதனை மேற்கொண்டேன்.
அதில் எனக்கு பாசிட்டிவ் வந்தபோது, உடைந்து போகாமல் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று ஓடிக்கொண்டிருந்தேன். அதன் பின், புற்றுநோய் தொடர்பான சிகிச்சைகளை எடுக்க தொடங்கினேன். அந்த வாழ்க்கை மிகவும் மோசமானதாக இருந்தாலும், என் மகளுக்காக நான் அனைத்தையும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.
மகள் வேதனை
எனக்கு புற்றுநோய் பாதிக்கப்பட்ட போது என்னுடைய மகள் ரொம்பவும் பயந்து போனாள். நான் சின்ன வயதிலிருந்து மகளை கொஞ்சி வளர்ப்பது கிடையாது. அப்போது, அம்மாவிற்கு ஒரு கட்டி வந்திருக்கிறது அது கேன்சர்.
அதற்காக சிகிச்சை எடுக்க போகிறேன். ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டும், நான் இதிலிருந்து மீண்டும் வரலாம், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் நான் அவருக்கு சொல்லிக் கொண்டே இருந்தேன். இந்த நேரத்தில் என் மகள் அனுபவித்த வலி சொல்லமுடியாதவை.
சிறுவயதில் இருந்து என் மகள் சந்தித்த பிரச்சனைகளால், அவள் என்னை விட, தைரியசாலியாகவே இருக்கிறாள். அவள் என்னுடைய வாழ்க்கையில் இருந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டாள். காலையில் எழும் பொழுது ஆரோக்கியமாக விழித்தீர்கள் என்றாலே, உங்களுக்கு என்ன பிரச்சினை வந்தாலும் நீங்கள் சமாளித்து விடுவீர்கள்" என கூறினார்.