நடிகர் விவேக் மகள் திருமணம் - அப்பா வழியில் மணமகள் செய்த நெகிழ்ச்சி செயல்!
மறைந்த நடிகர் விவேக்கின் மகள் தேஜஸ்வினி இன்று பரத் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
நடிகர் விவேக்
திரை வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை என இரண்டிலும் சிறந்து விளங்கியவர் நடிகர் விவேக். தனது சிந்தனையும், சிரிக்கவைக்கும் நகைச்சுவை ஆகியவற்றின் மூலம் சின்ன கலைவாணர் என்ற பட்டத்தை பெற்றார்.
மேலும், பல லட்சம் மரங்களை நட்டு, பிறரும் அதை பின்பற்ற முன்னோடியாக திகழ்ந்தார். இப்படி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் விவேக் கடந்த 2021-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார். இவரது இழப்பு திரையுலகில் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களின் மத்தியிலும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பானது.
திருமணம்
இந்நிலையில் விவேக்கின் மகள் தேஜஸ்வினி இன்று பரத் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் உள்ள சின்ன கலைவாணர் சாலையில் உள்ள அவர்களது வீட்டில் எளிய முறையில் நடந்தது.
தனது தந்தை விவேக்கின் கனவுபடியே மகள் தேஜஸ்வினி மற்றும் பரத் இருவரும் மரக்கன்றுகள், மூலிகை பூ செடிகள் நட்டுவைத்தனர். மேலும், திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கினர்.
நடிகர் விவேக், முன்னாள் ஜனாதிபதி மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழியில், 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை கனவாக வைத்திருந்தார் என்பதும் அதில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.